பினாங்கு துணை முதலமைச்சர் II டாக்டர் பி ராமசாமி, த ஸ்டார் நாளேட்டின் பத்திரிக்கையாளர், பத்திரிக்கை வெளியீட்டாளர் ஆகியோருக்கு எதிராக 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மெசர்ஸ் ஏ சிவநேசன் அண்ட் கோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக அந்த வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற சிவில் பதிவகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இயான் மக்கிண்டையர், ஸ்டார் பப்ளிகேஷன்ஸ் (எம்) பெர்ஹாட் ஆகியோர் பிரதிவாதிகளாக அதில் குறிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி ‘Distress in DAP continues’ ( டிஏபி-யில் துயரங்கள் தொடருகின்றன) என்னும் தலைப்பில் வெளியான கட்டுரை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி ‘What Ramasamy said in the interview with The Star’ ( த ஸ்டார் ஏட்டுக்கு அளித்த பேட்டியில் ராமசாமி என்ன சொன்னார் ) என்னும் தலைப்பில் வெளியான கட்டுரை ஆகியவை தொடர்பானது அந்த வழக்கு ஆகும்.
பினாங்கில் உள்ள தமது அலுவலகத்தில் 2011ம் ஆண்டு இயான் தம்மைப் பேட்டி கண்டதாகவும் அந்தக் கட்டுரை டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்பட்டதாகவும் ராமசாமி தமது கோரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கட்டுரை டிஏபி தலைவர் என்னும் முறையில் தாம் ஊழலானவர், அதிகாரத்தையும் பதவியையும் தவறாகப் பயன்படுத்துகின்றவர், நேர்மை இல்லாதவர் என்னும் மூல அர்த்ததை கொண்டிருந்தது என்றும் ராமசாமி கூறிக் கொண்டுள்ளார்.
அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தாம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அந்த வார்த்தைகளை சொல்லவில்லை என மறுத்ததாக ராமசாமி சொன்னார். ஆனால் டிசம்பர் 27ம் தேதி ஸ்டார் பப்ளிகேஷன்ஸ் (எம்) பெர்ஹாட்டில் இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது.
அந்த இரண்டு கட்டுரைகளும் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தலைவர் என்னும் முறையில் தமது பதவிக்கும் பெருமைக்கும் கடுமையான பங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கட்டுரைகளை பிரதிவாதிகள் மேலும் வெளியிடுவதிலிருந்து தடுக்க தாம் தடையுத்தரவு கோருவதுடன் அவதூறுகளுக்கும் நீதிமன்றம் பொருத்தமானது எனக் கருதும் மற்ற செலவுகளுக்கும் சேதங்களுக்கும் இழப்பீடும் கோருவதாக ராமசாமி தமது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெர்னாமா