பாஸ் பசுமைப் பேரணிக்கு உறுப்பினர்களைத் திரட்டுகிறது

பாகாங்கில் லினாஸ் அரிய மண் தொழிற்கூடம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக பிப்ரவரி 26ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமைப் பேரணி 2.0க்கு (Himpunan Hijau) ஆதரவாக ஒன்று திரளுமாறு அந்த மாநில பாஸ் தனது உறுப்பினர்கள் அனைவருக்கும் பணித்துள்ளது.

மக்களுக்குப் பாதகமான விளைவுகளைக் கொண்டு வரும் அந்தத் தொழிற்கூடத்தை நிராகரிப்பதற்கு குவாந்தானில் உள்ள எம்பிகே 1 திடலில் அந்தப் பேரணி நடத்தப்படுவதாக மாநில பாஸ் செயலாளர் ரோஸ்லான் ஜைனல் அல் அகமடி கூறினார்.

“ஐநா வலியுறுத்தும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு ஏற்பவும் அந்தப் பேரணி அமைந்துள்ளது. அமைதியாக நடத்தப்படும் அந்தப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு நான் பாஸ் சார்பில் பாகாங்கில் உள்ள அனைத்து பக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்றார் ரோஸ்லான்.

பாகாங் பாஸ் ஆணையரும் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவருமான துவான் இப்ராஹிம் துவான் மான் -னும் அந்தப் பேரணியில் பங்கு கொள்வார்.

அந்தப் பேரணியில் மூத்த பக்காத்தான் தலைவர்களும் கலந்து கொள்வர் என்று நேற்று நடைபெற்ற பக்காத்தான் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மலேசிய சோஷலிசக் கட்சி (Parti Sosialis Malaysia), மலேசிய மக்கள் கட்சி (Parti Rakyat Malaysia), பெர்சே 2.0 அமைப்பு, ஏபியூ என்ற அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அமைப்பு, Solidariti Anak Muda Malaysia, Saya Anak Bangsa Malaysia போன்ற சிவில் சமூக அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் அந்தப் பேரணியில் பங்கு கொள்ளும் என கடந்த வாரம் கூறப்பட்டது.

அந்த எல்லா அமைப்புக்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. அவற்றின் தலைவர்களும் பேரணியில் கலந்து கொள்வார்கள் என பசுமைப் பேரணி 2.0ன்  பிரச்சாரப் பிரிவுத் தலைவர் லீ சியான் சுங் கூறினார்.

அதில் கலந்து கொள்வதை தேசிய இலக்கியவாதி ஏ சாமாட் சையட்-டும் பெர்சே 2.0ன்  தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனும் உறுதி செய்துள்ளனர்.