மகாதீர்: “மலேசியாவில் ஆட்சி மாற வேண்டும் என அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்புகின்றன”

மலேசியாவில் ஆட்சி மாறுவதைக் காண அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆர்வமாக இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார்.

மலேசிய நிர்வாகம் தொகுதி சேராக் கொள்கையைப் பின்பற்றுவதும் சீனா, ரஷ்யா ஆகியவற்றுடன் நல்ல உறவுகளை வைத்திருப்பதும் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை என அவர் தமது சே டெட் வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

அத்துடன் ஈரான் மற்றும் இதர நாடுகள் மீதான அமெரிக்கக் கொள்கையை மலேசியா ஆதரிக்காததும் அமெரிக்காவுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது என்றார் அவர்.

“இந்த நாட்டில் பொம்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பும் வேட்பாளர் அன்வார் இப்ராஹிம் ஆவார். அவை அன்வாருடன் நீண்ட காலமாக வலுவான உறவுகளைப் பேணி வந்துள்ளன.”

“மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது அன்வார் பிரதமராகி விடுவார். அப்போது மலேசியா இஸ்ரேலுடன் அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு பாலஸ்தீனப் போராட்டத்திலிருந்து விலகி நிற்கும் என அமெரிக்கா கருதுகிறது.”

“அதன் வழி, பொம்மை அரசாங்கம் தோற்றுவிக்கப்படும். அது உலக ஆதிக்கத்தை நாடும் அமெரிக்க முயற்சிகளுக்கு உறு துணையாக இருக்கும்.”

அன்வார் அண்மையில் வால் ஸ்டீரிட் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியைக் குறி வைத்து மகாதீர் வலைப்பதிவில் எழுதியுள்ளதாக தோன்றுகிறது.

“இஸ்ரேலிய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும்” முயற்சிகளைத் தாம் ஆதரிக்கப் போவதாக அன்வார் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அதே வேளையில் பாலஸ்தீனர்களுடைய சட்டப்பூர்வ உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியிருந்தார்.

மலேசியா இஸ்ரேலுடன் அரசதந்திர உறவுகளைப் பெற்றிருக்கவில்லை. என்றாலும் அந்த நாட்டுடன் தனியார் நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதை தாங்கள் தடுக்க முடியாது என அரசாங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

TAGS: