நில விற்பனை மீது அவதூறு கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள், லிம்

பினாங்கு மேம்பாட்டுக் (பிடிசி) பாயான் முத்தியாராவில் உள்ள அரசாங்க நிலத்தை பேச்சு வார்த்தை மூலம் விற்பனை செய்யப்பட்டதாக கூறிக் கொள்வதை நிறுத்துமாறு அம்னோ தலைவர்களை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார்.

அந்த நில விற்பனை திறந்த டெண்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர். .

அம்னோ தலைவர்கள் கூறும் கருத்துக்கள் “அவதூறானவை” என டிஏபி தலைமைச் செயலாளருமான அவர் வருணித்தார்.

2010ம் ஆண்டு திறந்த டெண்டர் மூலம் பினாங்கு பாலத்துக்குத் தெற்கில் உள்ள 102 ஏக்கர் நிலம் விற்கப்பட்டது என்றும் விற்பனை ஒப்பந்தத்தின் கீழ் தாங்கக் கூடிய விலை கொண்ட வீடுகளையும் பள்ளிக்கூடங்களையும் வழிபாட்டு மய்யங்களையும் கட்ட வேண்டும் என்றும் லிம் தெரிவித்தார்.

“2010ம் ஆண்டு யோசனைகளைத் தெரிவிக்குமாறும் திறந்த டெண்டர் முறையின் கீழ் விண்ணப்பிக்குமாறும் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டு அதன் வழி அந்த நிலம் விற்கப்பட்டது. அதிக விலை கொடுக்க முன் வந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்யப்படவில்லை,” என லிம் விடுத்த அறிக்கை கூறியது.

அதன் நிர்ணயிக்கப்பட்ட விலை ஒரு சதுர அடிக்கு 200 ரிங்கிட் ஆகும். அது பிடிசி பெற்ற மதிப்பீட்டு விலையைக் காட்டிலும் மிக அதிகமாகும்,” என்றும் அவர் சொன்னார்.

“எங்களுக்கு ஒரு சதுர அடிக்கு 240 ரிங்கிட் என்னும் உயர்ந்த விலை கிடைத்தது. மொத்த விலை 1.07 பில்லியன் ரிங்கிட் ஆகும். ஐந்து ஆண்டுகளில் அந்தப் பணம் செலுத்தப்படும்.

அம்னோ எம்பி: அந்த விலை மிகக் குறைவு

அந்த நிலத்துக்கான விலை பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட டெண்டர் மூலம் விற்கப்பட்டதாக கடந்த வாரம் கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கூறியிருந்தார்.

அந்த நிலத்தின் உரிமையாளரான பிடிசி அதனை ஏன் மேம்படுத்தவில்லை என பினாங்கு அம்னோ தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மான்  கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த நிலத்தைச் சுற்றியுள்ள குவீன்ஸ்பே (அங்கு பிரபலமான பேரங்காடி அமைந்துள்ளது  போன்ற பகுதிகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் அதன் விற்பனை விலை “மிகவும் குறைவு” என்றும் ஜைனல் குறை கூறியிருந்தார்.

ஒரு சதுர அடிக்கு 240 ரிங்கிட் என்னும் விலை மிகக் குறைவு என “அம்னோ சேவகர்கள்” எண்ணினால் அவர்கள் ஏன் அந்த நிலத்துக்கு ஏலம் கேட்கவில்லை என்று லிம் வினவினார்.

தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வீடுகளைக் கட்டுவதிலிருந்து  மேம்பாட்டாளருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும்  தலை நிலத்தில் உள்ள பத்து காவானில் மட்டுமே அவர் அதனைச் செய்ய முடியும் எனக் கூறுவதும் உண்மையல்ல என்றார் அவர்.

பாயான் முத்தியாரா நில விற்பனையிலிருந்து கிடைக்கும் ஆதாயத்தை- 500 மில்லியன் ரிங்கிட்- பத்து காவானில்  தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் 12,000 வீடுகளை மாநில அரசாங்கம் நிர்மாணிக்கும் என்றும் லிம் தெரிவித்தார்.

அந்தத் திட்டம் மாநில அரசின் சொந்த முயற்சியாகும். பாயான் முத்தியாரா மேம்பாட்டாளருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பினாங்குத் தீவில் தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வீடுகளைக் கட்டுவதற்கு நில விற்பனை ஒப்பந்தத்தின் கீழ் கடமைப்பட்டுள்ளார். தலை நிலத்தில் அல்ல என்றார் அவர்.

“பத்து காவானில் வீடுகளை கட்டுமாறு பினாங்குத் தீவைச் சேர்ந்த மேம்பாட்டாளரைக் கேட்டுக் கொள்வதின் மூலம் பத்து காவானில் உள்ள ஏழை மக்களை விரட்டுவதற்கு மாநில அரசாங்கம் விரும்புவதாக அம்னோ மக்களிடம் பொய் சொல்வது தீய நோக்கத்தைக் கொண்டது,” என லிம் குறிப்பிட்டார்.

“அது உண்மையல்ல. தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வீடுகளைக் கட்டுவதற்காக தீவைச் சேர்ந்த மேம்பாட்டாளர்கள் செபராங் பிராய்க்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.”