அன்வாருடைய மலாக்கா செராமாவில் கைகலப்பு

நேற்று மலாக்கா அலோர் காஜாவில் உள்ள பெல்டா நிலக் குடியேற்றத் திட்டம் ஒன்றில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமா நிகழ்வில் பிகேஆர் ஆதரவாளர்களுக்கும் பிஎன் ஆதரவாளர்களுக்கும் இடையில் கைகலப்பு மூண்டது.

அந்த செராமாவில் கலந்து கொண்டவர்களுக்கு 50க்கும் மேற்பட்ட பிஎன் ஆதரவாளர்கள் “வேண்டுமென்றே ஆத்திரத்தை மூட்டியதாக” மலாய் மொழி சினார் ஹரியான் நாளேடு கூறியது. அந்த நிலத் திட்டத்தில் வசிக்கும் கிராம மக்களை அன்வார் “தூண்டி விட்டு” பிளவை ஏற்படுத்துவதைக் காணத் தாங்கள் விரும்பவில்லை என பிஎன் ஆதரவாளர்கள் கூறிக் கொண்டனர்.

அன்வார் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது இரு தரப்புக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சூழ்நிலை பதற்றமாக மாறியது என அந்த ஏடு தெரிவித்தது. பிஎன் ஆதரவாளர்களில் ஒருவர் “குத்தப்பட்டதும்” கைகலப்பு மூண்டது.

“தமது சகாக்களில் ஒருவரைக் குத்திய “மூர்க்கத்தனமான பிகேஆர் ஆதரவாளரே” கைகலப்புக்குக் காரணம் என அந்த இடத்தில் பிஎன் ஆதரவாளரான நிஸாம் பாஹாரோம் கூறினார்.

அலோர் காஜா, ஹுத்தான் பெச்சாவில் உள்ள பெல்டா துன் காபார் நிலத் திட்டத்தில் மாலை மணி 5.45 வாக்கில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. போலீசார் தலையிட்டதும் நிலைமை சாந்தமடைந்தது.

அன்வாருடைய வருகை மீது ஏற்பட்ட அதிருப்தியால் குழப்பம் உருவானது என்றும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் உமார் அலி சைபுதின் ஷாஹாருதின் கூறினார்.

இதனிடையே சபாவுக்கான எண்ணெய் உரிமப் பணத்தை 5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக எப்படி தாம் உயர்த்தப் போவதாக அன்வார் தெரிவிக்க தவறி விட்டார் என கோத்தா கினாபாலுவில் கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கூறியிருக்கிறார்.

அதனைச் செய்வதற்கு எண்ணெய் உற்பத்தி செய்யாத மற்ற மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகளைத் தாம் குறைக்கப் போவதில்லை என்பதற்கு அன்வார் உத்தரவாதம் அளிக்கத் தவறி விட்டார் என்றும் அப்துல் ரஹ்மான் சொன்னதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“ஆகவே சபாவுக்குக் கூடுதலாக எண்ணேய் உரிமப் பணம் கிடைக்கும் ஆனால் அவர் தலைமை தாங்கும் கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து நிதிகள் குறைவாகக் கிடைக்கும்,” என அவரை மேற்கோள் காட்டி அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.