ரௌடிக் கும்பல் தாக்கினாலும் மாணவர் விளக்கக் கூட்டங்கள் தொடரும்

கல்வித் துறை சுதந்திரம் மீதான விளக்கக் கூட்டங்களை எதிர்ப்பாளர்கள் வன்முறையைக் கொண்டு தாக்கினாலும் அந்தக் கூட்டங்கள் நாடு முழுவதும் தொடரும் என அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பிப்ரவரி 26ம் தேதி ஜோகூர் பத்து பஹாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடுத்த விளக்கக் கூட்டத்துக்குப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு சாரா மாணவர் அமைப்பான Solidariti Mahasiswa Malaysia அமைப்பின் தலைவர் அகமட் சுக்ரி அப்துல் ரசாப் கூறினார்.

“நாங்கள் ஆதரவு அந்தப் பகுதியில் வாழும் மக்களையும் நாடியுள்ளோம். கிள்ளானில் கடந்த வாரம் நாங்கள் பதற்ற நிலையிலிருந்து வெளியேறுவதற்கு உள்ளூர் மக்களே உதவி செய்தனர்,” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

பத்து பஹாட் நிகழ்வு பற்றிப் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி இன்னும் தரப்படவில்லை. அந்த நிகழ்வு சமூக மண்டபம் ஒன்றில் நடத்தப்படும்.

“நாங்கள் எங்களுடைய “பாதுகாப்பு ஊழியர்களையும்” கொண்டு வருவோம். எதுவும் நடக்குமானால் நாங்கள் அதிகமான எண்ணிக்கையில் அங்கு இருப்பதும் உறுதி செய்யப்படும்,” என்றார் சுக்ரி.

பிப்ரவரி 12ம் தேதி கிள்ளான் கம்போங் இடாமானில் அகமட் சுக்ரியையும் இதர 14 மாணவர் போராளிகளையும் குண்டர்கள் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளக்கக் கூட்டம் நிறுத்தப்பட்டது.

மாணவர் போராளிகளைப் பேசுவதற்கு அழைக்கின்றவர்கள், கலந்து கொள்கின்றவர்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது என்றும் சுக்ரி  தெரிவித்தார்.

“நாளை கிளந்தானைச் சேர்ந்த இளைஞர் அமைப்பு ஒன்று எங்களை பேச அழைத்துள்ளது. எந்த இடையூறையும் சமாளிக்கத் தயாராக இருக்குமாறும் அதன் திட்டங்களை தெரிவிக்குமாறும் அந்த அமைப்புக்கு கூறப்பட்டுள்ளது.”

கிள்ளான் சம்பவத்துக்குப் பின்னர் போலீசாரிடமிருந்து மாணவர்கள் எந்தத் தகவலையும் பெறவில்லை என்றும் அகமட் சுக்ரி சொன்னார்.

‘குடியிருப்பாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்’

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் தாக்குதல் தொடர்பில் ஐவர் கைது  செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் ஞாயிற்றுக் கிழமை காலையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் கிள்ளான் செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் மாட் யூசோப் கூறியதாக மலாய் ஏடான பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“அது தவிர அடையாள அணி வகுப்புக்காக 40 பேர் அழைக்கப்பட்டனர். விசாரணை இன்னும் தொடருகிறது,” என்றும் அவர் சொன்னார்.

பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் விளக்கக் கூட்டம் அந்தப் பகுதியைச் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு ஆத்திரத்தை மூட்டியதாகவும் அதனால் அவர்கள் மாணவர்களை விரட்டியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு மாதத்தில் ரௌடிக் கும்பல் தாக்குதலினால் நிறுத்தப்பட்ட இரண்டாவது செராமா இதுவாகும்.

ஏற்கனவே கிள்ளானுக்கு அருகில் உள்ள ஜாலான் கெபுனில் ஏபியூ என்ற அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அமைப்பு ஜனவரி 21ம் தேதி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ரௌடிக் கும்பல் தாக்கியதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது. அதில் ஒருவர் காயமடைந்தார்.