உண்ணாவிரத போராட்டக்காரர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய இரத்த அழுத்த நிலையை அறிந்து கொள்ள மருத்துவ உதவியாளர்கள் தவறியதைத் தொடர்ந்து அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

செருவான் கெமிலாங் மாஹ்முர் சென் பெர்ஹாட் என்ற வெட்டு மர நிறுவனத்தில் ஒர் முதலீட்டாளரான கான் ஈ செங், கடந்த 24 மணி நேரமாக உணவு உட்கொள்ளவில்லை.

தாம் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதும் தாம் உண்ணாவிரதம் இருந்த சிலாங்கூர் பாடாங் கோத்தா டமன்சாராவுக்கு மீண்டும் திரும்பப் போவதாக அவர் சூளுரைத்துள்ளார். தமது நிறுவனத்துக்கு 63 மில்லியன் ரிங்கிட்டைக் கொடுக்குமாறு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாகாங் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதை ஆட்சேபித்து கான் உண்ணாவிரதம் இருந்தார்.

பதில் ஏதும் கிடைக்காவிட்டால் எரியூட்டிக் கொள்ளப் போவதாகவும் அவர் நேற்று மருட்டியிருந்தார்.

பல பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் இன்று கான்-ஐ சந்தித்தனர். அட்டைப் பலகை ஒன்றில் படுத்திருந்த அவரால் பேசக் கூட முடியவில்லை. நீரைக் குடிப்பதற்குக் கூட அவருக்கு மற்றவர்கள் உதவி செய்ய வேண்டியிருந்தது.

அவருடைய உண்ணாவிரத்ததை கைவிடுமாறு கான் -ஐ வற்புறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடைய உடல் நிலையைச் சோதிக்க மருத்துவர் ஒருவரைக் கொண்டு வர முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் அதில் வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது.

கான் -னுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்கள் இருப்பதாகவும் அண்மையில் ரத்த நாளங்களைப் பெரிதாக்குவதற்கு  angioplasty செய்து கொண்டார் என்றும் செருவான் கெமிலாங்  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லீ சின் கூறினார்.