மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,13வது பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படுவதைவிட விரைவாக நடத்தப்படலாம் என்று ஆருடம் கூறியுள்ளார்.
அண்மைய கூட்டமொன்றில் பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் பலரும் மே அல்லது ஜூன் மாதம் தேர்தல் நடக்கலாம் என்று ஊகம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
அரசாங்கம் மக்களுக்கு அளித்துவரும் உதவிகள் மார்ச் மாத வாக்கில் முடிவுக்கு வரும் என்பதை அடிப்படையாக வைத்து அவர்கள் அவ்வாறு ஆருடம் கூறினர்.
“ஆனால்,நான் நினைக்கிறேன், அதைவிட விரைவில் நடத்தப்படும் என்று. ஏன்? ஏனென்றால் நான் அவர்களில் ஒருவனாக இருந்தவன்.அதனால் அவர்களின் எண்ணத்தை என்னால் உணர முடிகிறது”, என்றாரவர்.நேற்றிரவு பெங்கோக்கில் தாய்லாந்து வெளிநாட்டுச் செய்தியாளர் மன்ற(எப்சிசிடி)த்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அன்வார் இப்ராகிமுடன் ஒரு மாலைப்பொழுது’ என்ற நிகழ்வில் அன்வார் கலந்துகொண்டார்.
அந்நிகழ்வில் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதில்லை என்ற மலேசிய அரசாங்கக் கொள்கையைத் தற்காத்துப் பேசியது வியப்பைத் தந்தது.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விடையளித்த அன்வார், பயங்கரவாதிகள் சந்திக்கவும் பயிற்சிபெறவும் மறைந்துவாழவும் இடமளிப்பது உள்பட மலேசியா பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகக் கூறப்பட்டபோது,“மலேசிய அரசாங்கம் அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை”, என்றார்.
“மலேசிய அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள காரணம் ஏதுமில்லை”, என்றவர் சொன்னார்.
எப்சிசிடியின் அழைப்பின்பேரில் அன்வார் பெங்கோக் சென்றிருந்தார். மலேசியாவின் நடப்புகள் பற்றி அன்வாரின் கருத்துகளை அறிந்துகொள்ள அம்மன்றம் அவரை விருந்தினராக அழைத்திருந்தது.
அன்வார், மலேசியாவில் ஜனநாயகம், நிர்வாகம், தேர்தல், ஊழல், ஊடகங்கள், பொருளாதாரம் எனப் பல விவகாரங்கள் பற்றியும் விவரித்தார்.
அவர், இஸ்ரேலின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிப்பதாக வால் ஸ்திரிட் ஜர்னலில் அறிவிக்கப்பட்டிருந்தது பற்றிக் கருத்துரைத்த பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், வால் ஸ்திரிட் ஜர்னலிடம் திருத்தம் வெளியிடுமாறு கோரிக்கை விட வேண்டும் அல்லது அவர் சொன்னதை அது திரித்துக்கூறியிருந்தால் அதன்மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது குறித்தும் அன்வாரிடம் வினவப்பட்டது.
அன்வார், தாம் நாடு திரும்பியதும் பாஸ் தலைவரைச் சந்தித்து விளக்கம் அளிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
-பெர்னாமா