பிகேஆர்: மலேசியா பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம் கொடுத்ததா? இல்லையே

பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைச் சாடுவோருக்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியில் குதித்துள்ளார்.

குறிப்பாக, அன்வார் “இரட்டை முகம்” கொண்டவர் என்றும் இஸ்ரேலின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளார் என்றும் கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறிவைத்து அவர் பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு காண்பிப்பதில்  பிஎன் அரசு நிலையான கொள்கையைக் கடைப்பிடித்து வந்திருப்பதாக நஜிப்பால் கூற இயலாது என்றாரவர். ஏனென்றால்  2006-இல் அது பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம்கூட அளிக்கவில்லை.

2006, மே மாதம் தொகுதிசேரா இயக்க(நாம்) மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தியபோது, அரசாங்கம், அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதற்காக, ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் டாக்டர் மஹ்மூட் அல்ஸஹாரை மாநாட்டுக்கு அழைக்கவில்லை.

“(அவருக்குப் பதிலாக) பாலஸ்தீனத்தின் சார்பில் பேசுவதற்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் கதாமி அழைக்கப்பட்டிருந்தார்.இது வியப்பைத் தரவில்லை.ஏனென்றால் பாலஸ்தீன பிரதமர் இஸ்மாயில் ஹமியாவும் டாக்டர் மஹ்மூட்டும், அமெரிக்கவாலும் இஸ்ரேலாலும் பயங்கரவாத அமைப்பு என்று கருதப்படும் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்”, என்று சைபுடின் கூறினார்.

அமெரிக்கா, இஸ்ரேல் காட்டும் வழியில்  மலேசியா

“இச்சம்பவம், பாலஸ்தீனத்தைப் பொருத்தவரை பிஎன் அரசின் கொள்கை நிலையானதல்ல என்பதையும் பாலஸ்தீனம் மீதான அதன் வெளியுறவுக் கொள்கை அமெரிக்க, இஸ்ரேலிய கொள்கைகளைப் பின்பற்றிச் செல்வதையும் காண்பிக்கிறது”, என்றார்.

மலேசிய அரசின் அச்செயலை அப்போது பாஸ் துணைத் தலைவராக இருந்த நஷருடின் மாட் இசாவும் கடுமையாக சாடினார்.

“இஸ்ரேலும் அமெரிக்காவும் ஹமாஸ் தலைமையில் உள்ள பாலஸ்தீன அரசை மதிப்பதில்லை.அவற்றின் கொள்கையையே மலேசியாவும் பின்பற்றியது.இது மலேசிய அரசாங்கம் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என்பதைக் காண்பிக்கவில்லையா?”, என்றவர் வினவினார்.

நஷருடின் அண்மையில் பாலஸ்தீன பிரதமரைச் சந்தித்தபோது அன்வாரின் கருத்து குறித்து அவர் அதிர்ச்சியும் ஏமாற்றமும் கொள்வதாகக் குறிப்பிட்டார் என்று கூறியிருந்தது பற்றிக் கருத்துரைத்தபோது நஜிப் அவ்வாறு கூறியிருந்தார்.

பிகேஆரின் தோழமைக் கட்சியான பாஸும், அன்வார் அவ்வாறு  கூறியிருந்தால் தாம் கூறியதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அச்செய்தித்தாள் அவர் சொன்னதைத் திரித்துக் கூறியிருந்தால் அதன்மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.