தைப்பூசக் கொண்டாட்டங்களில் நஜிப் கலந்து கொள்வது சரி தான் ஆனால்…

முஸ்லிம் தலைவர் என்ற முறையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தைப்பூசம் போன்ற முஸ்லிம் அல்லாதவர் சமயக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது சரியானதுதான். ஆனால் சில வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என முன்னாள் பெர்லிஸ் முப்தி கூறுகிறார்.

“இன்னொரு சமயத்தின் ஒழுங்கு முறைகளிலும் சடங்குகளிலும் நஜிப் பங்கு கொள்ளாத வரையில் நாட்டின் தலைவர், நிர்வாகி என்ற ரீதியில் அறிவுரை வழங்குவதற்கு முஸ்லிம் அல்லாத சமயக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது அனுமதிக்கப்படுகிறது,” என முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் கூறினார்.

அத்தகைய நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் முஸ்லிம் தலைவர்கள், இன்னொரு சமயத்தை அங்கீகரிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. அதன் ஆடை அம்சங்களையும் காட்டக் கூடாது என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வருகைப் விரிவுரையாளருமான அவர் சொன்னார்.

“சடங்கு ஒன்றில் பிரதமர் சம்பந்தப்பட்டதுதான் ஒரே ஒரு தவறு ஆகும்.”

“அவர் மத நம்பிக்கையற்றவர் என்பது அதன் அர்த்தமல்ல. அவருக்கு ஒரு வேளை சரியான அறிவுரை கொடுக்கப்படாமல் இருந்திருக்கும்,” என அந்த முன்னாள் முப்தி சொன்னார்.

முஸ்லிம் அல்லாதவருடைய சமய கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றவர்களுக்கான வழி முறைகள் அறுதியானது அல்ல. அது சூழ்நிலையைப் பொறுத்ததாகும் என்றும் அஸ்ரி விளக்கினார்.

அந்த நிகழ்வின் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்களும் போலீஸ் போன்ற பொது ஒழுங்கில் சம்பந்தப்பட்டவர்களும் அதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.

அஸ்ரி சொன்னதை நடப்பு பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா ஒப்புக் கொண்டார். பிரதமருடைய சமய ஆலோசகர்கள் அவருக்கு நல்ல முறையில் ஆலோசனைகளை வழங்கத் தவறி விட்டனர் என்றார் அவர்.

“அந்த விவகாரம் மீது வழிகாட்டிகள் உள்ளன. நான் பிரதமருடைய ஆலோசகர்கள் மீது ஏமாற்றம் அடைந்துள்ளேன். இது பிரதமருடைய தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும்,” என அவர் வருத்தத்துடன் கூறினார்.

நஜிப் கடந்த வாரம் பத்துமலையில் நிகழ்ந்த தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அவர் அப்போது வெளிர் மஞ்சள் நிற குர்தாவை அணிந்திருந்தார் (பாரம்பரிய இந்திய ஆடைகளில் ஒன்று).

அவருக்கு அங்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. பாரம்பரிய இந்திய மலர் மாலையும் அவருக்கு போடப்பட்டது.

நஜிப்-பின் நடவடிக்கைகளை பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கண்டித்ததுடன் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் ஆண்டுதோறும் தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு வருகை அளிப்பதின் மூலம் ( அந்தக் கொண்டாட்டங்களுக்குப் போக வேண்டாம் என அறிவுரை கூறப்பட்டதற்கு முரணாக) நஜிப் முஸ்லிம் சமயத்தை மலிவாக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.