இண்டர்லோக் மீட்பு தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி!

சர்ச்சைக்குரிய ஐந்தாம் படிவ மலாய் இலக்கிய நாவலான இண்டர்லோக்கை பாடத்திட்டத்தில் இருந்து கல்வி அமைச்சு மீட்டுக் கொள்ள வேண்டும் என்று மலேசியாவில் ஆங்காங்கே பல பொது இயக்கங்கள் போராட்டம் நடத்தி வந்த போதிலும் நம் தமிழ்ச் சமுதாயத்தின் நலன் கருதி கடந்த 08/01/2011 ஆம் நாள் முதல் முதலில் கிள்ளான் நகரில் இந்த நாவல் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்து எதிர்ப்புப்  போராட்டத்தை துவக்கியது சிலாங்கூர் கூட்டரசு வளாகத் தமிழ்க் கலை இலக்கிய பண்பாட்டு இயக்கம், கிள்ளான் சிறு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் சிலாங்கூர் கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களேயாகும்.

இந்நாவலை மீட்டுக் கொள்ள போராடி பலர் போலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். குறிப்பாக பத்துமலை வளாகத்தில் போராட்டம் நடத்திய போது  தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தோழர் மனோகரன் மாரிமுத்து (DAP) மற்றும் மலேசியத் தமிழ் மாணவர் இயக்க தேசியத் தலைவர் எம்.எசு. அர்ச்சுணன், பினாங்கில்  இந்த இயக்கத்தின் இளைஞர் பகுதி தலைவர் கலைமுகிலன் தமிழ்  ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் இந்த போராட்டத்திற்கு துணை நின்று அவ்வப்போது எங்களுக்கு ஆலோசனை வழங்கிய முனைவர். ஆறு.நாகப்பன், இந்நூலை முழுமையாக ஆய்வு செய்து பிற்காலத்தில் இந்நாவலினால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள் என்ன என்பதை மக்களுக்கு விளக்கிய மலாயப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர். குமரன் சுப்பிரமணியம், காவல்துறை புகார் செய்து கிள்ளான் நகரில் முதல் போராட்டத்தைத் துவக்கிய வழக்கறிஞரும் கோத்தா ஆலாம் சா சட்டமன்ற உறுப்பினருமாகிய மாண்புமிகு தோழர் எம்.மனோகரன் (DAP) மற்றும் இனம் பாராமல் பெண்ணாக இருந்தாலும் துணிச்சலாக மக்கள் நலன் கருதி எங்களுடன் இணைந்து இந்நாவலை மீட்டுக்கொள்ள போராடிய கோத்தா ராஜா (PAS) நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா  மாமூட் அவர்களுக்கும் நியாட் எனப்படும் இண்டர்லோக் எதிர்ப்புக்குழுவைச் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் நாங்கள் அனைவரும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இந்நாவல் மீட்பு குறித்து அவ்வப்போது உண்மைச் செய்திகளை வெளியிட்ட இணையத்தள நாளிதழான செம்பருத்தி மற்றும் முடிந்த வரை இண்டர்லோக் எதிர்ப்புச் செய்திகளை வெளியிட்ட மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ்நேசன் ஆகிய மூன்று தமிழ் நாளிதழ்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

-இன்பச்சுடர் சந்திரன்

TAGS: