ஒரே மலேசியா சின்னம் இல்லை என்றால் அரசாங்க உதவித் தொகையும் இல்லை

சீனி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் ஆகிய மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசாங்க உதவித் தொகைகளை தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால் இம்மாதத் தொடக்கத்திலிருந்து அந்த பொருட்களை விற்பனைக்கு அனுப்பும் போது அதன் பொட்டலங்களில் ஒரே மலேசியா சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.

என்றாலும் தயாரிப்பு நிறுவனங்கள் அந்த விதிமுறையைப் பின்பற்றுவதற்கு மேலும் அவகாசம் வழங்குவது பற்றியும் அரசாங்கம் பரிசீலிப்பதாக உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகாரத் துணை அமைச்சர் தான் லியான் ஹோ கூறினார்.

“நான் அதனை (கூடுதல் அவகாசம் வழங்குவது) இன்றைய அமைச்சுக் கூட்டத்தில் விவாதத்துக்குக் கொண்டு செல்லப் போகிறேன்,” என்று தான் பேராக் தைப்பிங்கில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கூறியதாக பல உள்நாட்டுச் சீன மொழி நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தப் புதிய கொள்கை பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதலில் அறிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி முதல் தங்களது பொட்டலங்களில் ஒரே மலேசியா சின்னத்தைப் பயன்படுத்துமாறு அரசாங்கம் கோதுமை மாவு தயாரிப்பு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது. ஆனால் அது கட்டாயமாக்கப்படவில்லை.

என்றாலும் இம்மாதத் தொடக்கத்திலிருந்து ஒரே மலேசியா சின்னம் மீதான கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அத்துடன் சீனி, சமையல் எண்ணெய் ஆகிய மேலும் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுக்கும் விரிவு செய்யப்பட்டது.

அந்த மூன்று பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அந்தக் கொள்கையைப் பின்பற்றத் தவறினால் அரசாங்கத்தின் உதவித் தொகைகளை அவை அனுபவிக்க முடியாது.

அந்த சின்னத்தின் அளவு 4 சென்டி மீட்டர்

பொட்டலங்களில் பொறிக்கப்படுவதற்கான ஒரே மலேசியா சின்னத்துக்கான குறிப்புக்களையும் அமைச்சு நிர்ணயித்துள்ளதாகவும் சைனா பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

சின்னத்தின் அளவு குறைந்த பட்சம் 4 சென்டி மீட்டராக இருக்க வேண்டும். நன்றாகத் தெரியும் இடத்தில் அது பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் “இந்த சமையல் எண்ணெய் விலைக்கு (அல்லது சம்பந்தப்பட்ட பொருள்) அரசாங்கம் உதவித் தொகை வழங்கியுள்ளது” என்ற சொற்றொடரும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

புதிய விதிமுறைகள் குறித்து சில தயாரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டு சீனப் பத்திரிக்கைகளிடம் அதிருப்தி தெரிவித்துள்ளன. அதன் அமலாக்கம் “மிக மிக அவசரமாக இருப்பதாகவும்” அதனைப் பின்பற்றுவதற்கு தங்களுக்குக் கூடுதல் அவகாசம் தங்களுக்குத் தேவையென்றும் அவை கூறின.

தயாரிப்பு நிறுவனங்களுடைய கவலையை தாம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அமைச்சு அதனை விவாதிக்கும் என்றும் தான் சொன்னார்.

அரசாங்கக் கடன்கள் அதிகரிப்பதை தடுக்கும் பொருட்டு பரவலாகப் பயன்படுத்தப்படும் பல பயனீட்டாளர் பொருட்களுக்கான உதவித் தொகைகளை குறைப்பதை நோக்கி அரசாங்கம் சென்று கொண்டிருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.