பங்சாரில் மேபேங்க் ஊழியர்களின் 3 மணி நேர மறியல்

இன்று பின்னேரத்தில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 200 மேபேங்க் ஊழியர்களும் தொழிற்சங்கவாதிகளும் பங்சார் மேபேங்க்கின் முன் கூடி மேபேங்க் ஊழியர்களை மட்டும் அங்கத்தினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம் (in-house union. It is also called “coffin-union”) ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

செந்நிற உடை அணிந்திருந்த சங்க உறுப்பினர்கள் தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம் (NUBE) அமைந்திருக்கும் பிரிக்பீல்ட்ஸ்சிலிருந்து பிற்பகல் மணி 3.00க்கு புறப்பட்டனர்.

மழை கொட்டியது. அதனைப் பொருட்படுத்தாமல் நடந்த அவர்கள் 30 நிமிடங்களுக்குப் பின்னர் பங்சார் மேபேங்க் அலுவலகம் முன் கூடினர்.

“மேபேங்க் கொடூரமானது” என்று முழங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் “என்யுபிஇ உறுப்பினர்களை துன்புறுத்துவதை நிறுத்து”, “மேபேங்க் மலேசிய தொழிலாளர்களை கொள்ளையடிக்கிறது” மற்றும் “எங்களுக்கு குறைந்த ஊதியம் கொடுக்கப்படுகிறது” என்ற வாசகங்களைக் கொண்ட பதாதைகளை அவர்கள் ஏந்தி நின்றனர்.

என்யுபிஇ ஏற்பாடு செய்திருந்த அந்த மறியல் அச்சங்கத்தின் இரு தலைவர்களை மேபேங்க் வேலைநீக்கம் செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நடத்தப்பட்டது.

வங்கி ஊழியர்களுக்கு தேசிய அளவிலான தொழிற்சங்கம் இருக்கையில், மேபேங்க் அதன் ஊழியர்களுக்கு மட்டும் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க கடந்த ஆண்டு ஊக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இது இந்நாட்டின் தொழிலுறவு சட்டத்திற்கு முரணான செயல் என்று என்யுபிஇ கருதுகிறது.

என்யுபிஇயின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கோலாலம்பூருக்கு வந்திருக்கும் அனைத்துலக தொழிற்சங்க தலைவர்கள் மேபேங்க் இப்பிரச்னையை உடனடியாகத் தீர்க்காவிட்டால், இவ்விவகாரம் அனைத்துலக தொழிலாளர் மன்றத்தில் (ILO) எழுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாகுபாடு, குறைவான ஊதியம்

மேபேங்க் தொழிலாளர்களில் பலர் தாங்கள் நிருவாகத்துடன் பல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளதோடு குறைவான ஊதியம் பெறுவதாகவும் மலேசியாகினியிடம் கூறினர்.

சித்தி என்று மட்டும் தன்னை அடையாளம் காட்டிய ஒரு பெண் ஊழியர் கருவுற்றுள்ள பெண் ஊழியர்களுக்கு எதிராக நிருவாகம் பாகுபாடு காட்டுவதாக கூறினார்.

“கருவுற்ற பெண் ஊழியர்களின் சீருடை படியை (அலவன்ஸ்) அவர்கள் கொடுப்பதில்லை”, என்று சித்தி கூறினார்.

மாறாக, 2000 ஆண்டிலிருந்து மேபேங்க் அதிகாரிகளுக்கு செயல்நிறைவேற்ற போனஸ் வழங்கப்படுகிறது. ஆனால், குறைந்த ஊதியம் பெறும் கீழ்மட்ட ஊழியர்களுக்கு அதுபோன்ற அனுகூலம் கொடுக்கப்படுவதில்லை.

அஹமட் என்று மட்டும் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட ஓர் ஊழியர் ஒரு சிறந்த கூட்டு ஒப்பந்தம் செய்யப்படுவதற்கான என்யுபிஇயின் முயற்சிகளுக்கு மேபேங்க் தடையாக இருந்து வருகிறது என்றார்.

“எங்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் அனைத்து வங்கிகளும் வழங்கும் ஊதியத்தில் ஆகக் குறைந்ததாகும்”, என்றாரவர்.

மேபேங்க்: இருவரும் பேங்கின் தோன்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினர்

இன்று பின்னேரத்தில், மேபேங்க் விடுத்த ஓர் அறிக்கையில் பேங்கின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் அவ்விரு ஊழியர்களும் வேலைநீக்கம் செய்யப்பட்டனர் என்று கூறிற்று.

கடந்த ஆண்டு, சுவிட்ஸர்லாந்தில் நடந்த ஐஎல்ஒ (ILO) மாநாட்டில் கலந்துகொண்ட அவ்விரு ஊழியர்களும் “மேபேங்க் மலேசிய தொழிலாளர்களைக் கொள்ளையடிக்கிறது” என்ற வாசகத்தைக் கொண்ட பதாகையை ஏந்தி இருந்தனர் என்று மேபேங்க் மனிதவள இலாகாவின் தலைவர் நோரா அப்துல் மானாப் கூறினார்.

“என்யுபிஇ கூறிக்கொள்வதுபோல் அந்த இருவரும் வேலைநீக்கம் செய்யப்பட்டது அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக அல்ல”, என்று அவர் மேலும் கூறினார்.

வங்கியின் நலன்களுக்கு பெரும் பாதங்களை விளைவித்த நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது இது முதல் தடவை அல்ல என்றும் அவர் வலுயுறுத்திக் கூறினார்.

“(வங்கியின்) நற்பெயரும் தோற்றமும்  இது போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டாமல் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்வதற்காக நாங்கள் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இதர ஈடுபாடுள்ளவர்களின் நலன்களைப் பாதுகாப்போம்”, என்றாரவர்.