ஒரே மலேசியா சின்னம் அரசியல் அல்ல என்கிறார் பிரதமர்

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை தாயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மலேசியா சின்னத்தைத் தங்களது பொட்டலங்களில் சேர்க்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவது அரசியல் நடவடிக்கை அல்ல என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

“ஒரே மலேசியா என்பது அரசியல் அல்ல, அது மலேசியாவைப் பற்றியது,” என நஜிப் கூறினார்.

கோலாலம்பூரில் நேற்று பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

சீனி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் ஆகிய மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசாங்க உதவித் தொகைகளுக்குத் தொடர்ந்து தகுதி பெறுவதற்கு அந்தப் பொருட்களின் பொட்டலங்களில் ஒரே மலேசியா சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகாரத் துணை அமைச்சர் தான் லியான் ஹோ பிப்ரவரி 10ம் தேதி அறிவித்தார்.

அரசாங்கம் அந்தப் பொருட்களுக்கு உதவித் தொகைகளை வழங்குகிறது என்பதை பயனீட்டாளர்களுக்கு தெரிவிப்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகும். அது இந்த மாதத் தொடக்கத்திலிருந்து அமலாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாண்டு ஜனவரி முதல் தங்களது பொட்டலங்களில் ஒரே மலேசியா சின்னத்தைப் பயன்படுத்துமாறு அரசாங்கம் கோதுமை மாவு தயாரிப்பு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது. ஆனால் அது கட்டாயமாக்கப்படவில்லை.

என்றாலும் இம்மாதத் தொடக்கத்திலிருந்து ஒரே மலேசியா சின்னம் மீதான கொள்கை கட்டாயமாக்கப்பட்டது.  அத்துடன் சீனி, சமையல் எண்ணெய் ஆகிய மேலும் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுக்கும் விரிவு செய்யப்பட்டது.

புதிய விதிமுறைகள் குறித்து சில தயாரிப்பு நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அதன் அமலாக்கம் “மிக மிக அவசரமாக இருப்பதாகவும்” அதனைப் பின்பற்றுவதற்கு தங்களுக்குக் கூடுதல் அவகாசம் தங்களுக்குத் தேவையென்றும் அவை கூறின.

ஆண்டுதோறும் BR1M வழங்கப்படுமா?

ஒரே மலேசியா சின்னம் பிஎன் பிரச்சார எந்திரத்தின் ஒரு பகுதி என்பதை பிஎன் எதிர்ப்பாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அரசாங்கம் பிஎன் குறித்து பிரச்சாரம் செய்வதற்கு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

BR1M என்ற ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டத்தின் கீழ் 500 ரிங்கிட் வழங்கப்படுவது ஆண்டு நிகழ்வாக மாற்றப்படுமா என்னும் கேள்விக்கு நஜிப் உறுதியாகப் பதில் அளிக்கவில்லை.

“நாம் முதலில் பார்ப்போம். நேரம் வரும் போது நாங்கள் அறிவிப்போம்,” என்றார் அவர்.

அந்த BR1M திட்டத்தையும் மாணவர்களுக்கான 100 ரிங்கிட் உதவித் திட்டத்தையும் ஆண்டு நிகழ்வாக்குமாறு ஏற்கனவே டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், நஜிப்பைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு செய்வதின் மூலம் 13வது பொதுத் தேர்தலை ஒட்டி வாக்குகளைப் பெறுவதற்காக அந்த நடவடிக்கையை நஜிப்  மேற்கொள்ளவில்லை என்பது மெய்பிக்கப்படும் என லிம் சொன்னார்