பொதுத் தேர்தல்களில் அழியா மையைப் பயன்படுத்தப்படுவது பற்றிய அறிவிப்பு அரசு இதழில் பிப்ரவரி 13-இல் வெளியாகியிருப்பதாக தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் தெரிவித்தார்.
அதனை அடுத்து அழியா மையை 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்த இசி திட்டமிட்டிருக்கிறது.
ஆனால், அந்த மையை இன்னும் வாங்கவில்லை.ஏனென்றால் மையை வாங்கியதும் மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தி ஆக வேண்டும்.
“முன்கூட்டியே மையை வாங்கி வைத்திருக்க முடியாது.ஏனென்றால் மூன்று மாதங்களுக்குப் பின்னர் அதன் தன்மை மாறிவிடும்”. நேற்றிரவு ஆர்டிஎம்1-இல் ஒளியேறிய ‘டயலோக்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்துல் அசீஸ் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையம் மைக்கு ஆர்டர் கொடுக்கும்.
“இரண்டு வாரங்களில் அது வந்துசேரும்.மையை நிரப்பி வைப்பதற்கான போத்தல்கள், போத்தல் மூடிகள்,போத்தல்களை வைப்பதற்கு பெட்டிகள் முதலியவற்றைச் சேகரிக்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன”, என்றாரவர்.
அஞ்சல்வழி வாக்களிப்பில் மை பயன்படுத்தப்படாது
மையின் நிறம் பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூறிய அப்துல் அசீஸ் அஞ்சல்வழி வாக்களிப்பில் அது பயன்படுத்தப்படாது என்றார்.
வாக்களிப்பு மையங்களுக்கு வரும் வழியில் வேறு எவரும் தங்கள் விரல்களில் மைதடவ அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் வாக்காளர்களுக்கு அறிவுரை கூறினார்.அப்படிச் செய்தால் அவர்கள் வாக்களிக்கும் தகுதியை இழப்பர்.
வாக்களிப்பு மையங்களில் வாக்காளர்களின் இடக் கை சுட்டுவிரலில் மை தடவப்படும்.அழியா மையைப் பயன்படுத்துவதற்கு வேதியல் துறை, சுகாதார அமைச்சு,தேசிய ஃபாட்வா குழு ஆகியவை அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் அப்துல் அசீஸ் தெரிவித்தார்.