வர்த்தக செல்வந்தர் தாஜுடின் ராம்லி-க்கும் ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையில் அண்மையில் உடன்பாடு காணப்பட்டுள்ள தீர்வு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழலை “மறைக்கும்” நோக்கத்தை கொண்டுள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அஞ்சுகிறார்.
“தாஜுடின் அந்த வழக்கைத் தொடர்ந்தால் அந்த நேரத்தில் இருந்த பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோரை சம்பந்தப்படுத்தக் கூடிய உடன்பாடுகளையும் ஊழலையும் அவர் அம்பலப்படுத்தப்படுத்தக் கூடும் என அவர்கள் அஞ்சியிருக்கலாம் என நான் கவலைப்படுகிறேன்,” அன்வார் சுபாங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.
அந்தச் செல்வந்தருக்கும் அரசாங்கத்தின் முதலீட்டு அமைப்பான டானாஹர்த்தாவுக்கும் இடையில் நீதிமன்றத்துக்கு வெளியில் செய்து கொள்ளப்பட்ட தீர்வு பற்றி அவர் கருத்துரைத்தார்.
அந்த வழக்கில் பில்லியன் கணக்கான பொது நிதிகள் சம்பந்தப்பட்டுள்ளன. அதனால் அது தனிப்பட்ட தீர்வுக்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.