மூன்று அமைப்புகள் பிஎன்னில் இணை உறுப்பியம் பெற்றன

பாரிசான் நேசனல் இணை உறுப்பினர்களாக ஏற்கப்பட்ட மூன்று அமைப்புகளில் காபோங்கான் வவாசான் ஜெனரசி ஃபெல்டாவும்(GWGF) ஒன்று எனப் பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் அறிவித்துள்ளார்.

மற்ற இரண்டு அமைப்புகளில், ஒன்று முன்னாள் கெமாஸ் உறுப்பினர் சங்கம் மற்றது மலாய்க் குத்தகையாளர் சங்கம்.

பிஎன்னில் இணை உறுப்பியம் பெற 11 அமைப்புகள் விண்ணப்பித்துக் கொண்டிருந்தன என்றும் அவற்றில் இம்மூன்றின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் நஜிப் தெரிவித்தார். அவர், நேற்றிரவு கோலாலம்பூர் புத்ரா உலக வாணிக மையத்தில் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மற்ற அமைப்புகளின் விண்ணப்பங்கள் பிஎன் நிர்வாகக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

பிப்ரவரி 26 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள ஹிம்புனான் ஹிஜாவ் 2.0 பேரணி பற்றிக் கருத்துரைத்த நஜிப், அமைதிப் பேரணி சட்டத்தின்கீழ் எந்தவொரு தரப்பும் பேரணி நடத்த உரிமை பெற்றிருப்பதாகக் கூறினார்.

எனவே, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. அதைவிடவும் பெரிய கூட்டத்தைக் கவர்ந்திழுக்க பல திட்டங்கள் பிஎன்னிடம் உள்ளன என்றவர் குறிப்பிட்டார்.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில் பதவி விலகப் போவதில்லை என்று முடிவு செய்திருப்பது பற்றி அவரிடம் கருத்துக் கேட்டதற்கு, “அது பற்றிக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. அதில் முடிவெடுக்கும் உரிமை பிரதமருக்கு மட்டுமே உண்டு”, என்றார்.

-பெர்னாமா