விக்கிலீக்ஸ்: பக்காத்தான் சிலாங்கூரில் கீழ்படியாத அரசு ஊழியர்கள்

2008 மார்ச் பொதுத் தேர்தலில் நாட்டின் பணக்கார மாநிலத்தைக் கைப்பற்றிய பக்காத்தான் அரசாங்கம் பல மாதங்களுக்கு “கீழ்படியாத அரசு ஊழியர்களுடன்” பல சிரமங்களை எதிர்நோக்கியது.

இவ்வாறு அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து கசிந்த தகவல் ஒன்று தெரிவித்தது. அந்தத் தகவலுக்கு மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமாரை அது மேற்கோள் காட்டியது.

“கீழ்படியாத அரசு ஊழியர்களைச் சமாளிப்பதில் சிரமங்களை” எதிர்நோக்கியது என அவர் கூறியதாக அது தெரிவித்தது.

அந்த ஊழியர்கள் (முன்னாள்) பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் பிஎன் அரசாங்கத்துடன் தொடர்பு உடையவர்கள். அத்துடன் அரசாங்க வழிகளிலிருந்து நிதிகளைத் திசை திருப்புவதற்காக பிஎன் இணை  அரசாங்க அமைப்புக்களையும் அமைக்க முயன்றது”, என்றும் ஜெயகுமார் தெரிவித்ததாகவும் அந்தத் தகவல் குறிப்பிட்டது.

கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம், வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய அந்த அரசதந்திரக் குறிப்பை விக்கிலீக்ஸ் என்ற இணையத் தளம் கடந்த வெள்ளிக்கிழமை அம்பலப்படுத்தியது.

வழிபாட்டு மையங்களை உடைக்க வேண்டாம் என்றும் புதிய விளம்பரப் பலகைகளை அமைக்க வேண்டாம் என்றும் பக்காத்தான் அரசாங்கம் வெளியிட்ட உத்தரவை மூத்த மாநில அரசு அதிகாரிகள் மீறியதாகவும் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

விளம்பரப் பலகைகள் வழி கிடைக்கும் வருமானம் தனியார் கணக்குகளுக்குப் போய்ச் சேருவதாக புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அமெரிக்கத் தூதரைச் சந்தித்த ஜெயகுமார், “பல மாநில அரசு ஊழியர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை நிர்வாகம் செய்வதாக” தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது. அதன் விளைவாக மாநில அரசாங்கம் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.”

“இணை அரசாங்கம்”

அடி நிலையில் பிஎன்-னுக்கு ஆதரவான கிராமத் தலைவர்களை நியமித்து இணை அரசாங்கத்தையும் கூட்டரசு நிதிகளை விநியோகம் செய்வதற்கு கூட்டரசு அமைப்புக்களையும் உருவாக்க கூட்டரசு அரசாங்கம் முயலுவது பற்றியும் அதிகக் கவலை தெரிவிக்கப்பட்டது.

“மாநிலத்துக்கான நிதியைக் கூட்டரசு அரசாங்கம் குறைப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும் மாநிலத்துக்கு சொந்தமான அமைப்புக்களிடமிருந்து திட்டங்களையும் குத்தகைகளையும்  திசை திருப்ப “வியூகம்” வகுக்கப்பட்டது.”

என்றாலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 விழுக்காட்டை வழங்கும் சிலாங்கூர் மாநிலம் தனது சொந்த நிதி ஆற்றலில் நிற்க முடிந்தது என ஜெயகுமார் கூறியதாகவும் அந்த அரசதந்திரக் குறிப்பு தெரிவித்தது.

சிலாங்கூர் நாட்டின் பொருளாதார அரசியல் மையப் பகுதியில் இருப்பதால் மற்ற எதிர்க்கட்சி மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூரில் பக்காத்தான் ஆளுமை “தேசிய ரீதியில் எதிரொலிக்கும்” சாத்தியத்தை கொண்டுள்ளது என்றும் அமெரிக்கத் தூதர் சுட்டிக் காட்டியுள்ளார்.