சிலாங்கூர் 15 பில்லியன் ரிங்கிட் செலவில் அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும்

சிலாங்கூர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 15 பில்லியன் ரிங்கிட்டைச் செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தத் தகவலை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் இன்று வெளியிட்டார்.

அந்தத் தொகையில் 7.4 பில்லியன் ரிங்கிட் சிலாங்கூரில் மூன்று முதல் நான்கு புதிய நெடுஞ்சாலைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும்.

எஞ்சிய தொகை எம்ஆர்டி, எல்ஆர்டி திட்டங்கள் விரிவுபடுத்தப்படுவதால் கிடைக்கும் பயன்களுக்கு செலவு செய்யப்படும்.”.

அது தவிர நாங்கள் நான்கு பெரிய மேம்பாட்டுத் திட்டங்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்-அதில் ஒவ்வொன்றும் 6070.29 ஹெக்டர் நிலம் சம்பந்தப்பட்டதாகும். அவை இவ்வாண்டு மேம்படுத்தப்படும்,” என்று அவர் 2012ம் ஆண்டுக்கான அனைத்துலக இந்தியர் சிறிய நடுத்தரத் தொழில்கள்/நிறுவனங்கள் மீது பெட்டாலிங் ஜெயாவில் நிகழும் கருத்தரங்கில்  பேசினார்.

கடந்த ஆண்டு முதல் 11 மாதங்களில் மட்டும் மொத்தம் 218 தயாரிப்புத் திட்டங்களுக்காக கூட்டு உள்நாட்டு, அந்நிய நேரடி முதலீடுகளாக 6.8 பில்லியன் ரிங்கிட்டை சிலாங்கூர் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவை கிட்டத்தட்ட 15,000 வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாகவும் சேவியர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதால் உள்நாட்டு நேரடி முதலீடுகள் இவ்வாண்டு அதிகரிக்கும் என்றும் சிலாங்கூர் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

“அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு பசுமைத் தொழில்நுட்பம், சூரிய சக்தி, தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறைகள் ஆகிய குறிப்பிட்ட துறைகளில் முதலீடு செய்யுமாறு அந்நிய நிறுவனங்கள்  கேட்டுக் கொள்ளப்படும்.”

கடந்த ஆண்டு மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.2 விழுக்காடாக இருந்தது பற்றிக் கருத்துரைத்த சேவியர், அந்த இலக்கை அடைய முடிந்தது குறித்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

“எதிர்காலத்திலும் அதே வளர்ச்சி கிடைக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.

பெர்னாமா