உதவித் தொகை கொடுக்கப்படும் பொருட்கள் மீது ஒரே மலேசியா சின்னத்தை வைப்பதைக் கட்டாயமாக்கும் அரசாங்க நடவடிக்கை பிஎன் -னுக்கு ஆதரவாக வாக்குகள் திசை மாறும் நிலை ஏதும் இருந்தால் அதன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
“அவர்கள் அந்தச் சின்னத்தைப் போட்டால் விலை குறைய வேண்டும். அவர்கள் அந்த சின்னத்தைப் போட்டு விலை உயர்ந்தால் அவர்களுக்கு வாக்குக் கிடைக்காது,” என அந்த பெர்மாத்தாங் எம்பி கிண்டலாகக் கூறினார்.
“(எதுவும் இருந்தால்) மக்கள் அந்த சின்னத்தைப் பார்த்ததும் விலை உயரும் என்று அவர்களுக்கு தெரிந்து விடும்,” என அன்வார் புன்னகையுடன் கூறினார்.
இன்றியமையாப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது பொட்டலங்களில் ஒரே மலேசியா சின்னத்தை போட்டால் மட்டுமே அவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும் என அரசாங்கம் ஆணையிட்டிருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார்.
நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்த உத்தரவைத் தற்காத்துப் பேசினார்.
“ஒரே மலேசியா என்பது அரசியல் அல்ல, அது மலேசியாவைப் பற்றியது,” என நஜிப் கூறினார்.
கோலாலம்பூரில் பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
சீனி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் ஆகிய மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசாங்க உதவித் தொகைகளுக்குத் தொடர்ந்து தகுதி பெறுவதற்கு அந்தப் பொருட்களின் பொட்டலங்களில் ஒரே மலேசியா சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகாரத் துணை அமைச்சர் தான் லியான் ஹோ பிப்ரவரி 10ம் தேதி அறிவித்தார்.
அரசாங்கம் அந்தப் பொருட்களுக்கு உதவித் தொகைகளை வழங்குகிறது என்பதை பயனீட்டாளர்களுக்கு தெரிவிப்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகும். அது இந்த மாதத் தொடக்கத்திலிருந்து அமலாக்கப்பட்டிருக்க வேண்டும்.
இஸ்ரேலுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கருத்துக்களை அவர் வெளியிட்டதாக கூறப்படுவது தொடர்பில் அவருக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் அன்வாரிடம் வினவப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அன்வார், மும்பாய் ஏசியன் வால் ஸ்டீரிட் சஞ்சிகைக்கு தாம் அளித்த பேட்டியை அம்னோ/பிஎன் திரித்து விட்டதாக கூறினார்.
“அவர்கள் அவதூறு கூறுகின்றனர். அவர்கள் பொய் சொல்லுகின்றனர். பாலஸ்தீனர்களுடைய உரிமைகள் மீது நான் சொன்ன கருத்துக்களை அவர்கள் நீக்கி விட்டனர்,” என்றார் அவர்.
அரசாங்கத்துக்கு நட்புறவான ஊடகங்கள் அத்தகைய செய்திகளை தேர்வு செய்து வெளியிடுகின்றன. எடுத்துக் காட்டுக்கு மலேசியத் தலைவர்களுக்கும் இஸ்ரேலியத் தலைவர்களுக்கும் இடையில் நிகழும் சந்திப்புக்களைப் பற்றிய செய்திகளை அவை பெரிதாக வெளியிடுவதே இல்லை என்றும் அன்வார் சொன்னார்.