ஆஸ்திரேலியாவின் கர்ட்டின் பல்கலைக்கழகம் ரோஸ்மா மான்சோருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்த போது அவரை மலேசியாவின் தலைமகள் ( first lady of Malaysia ) எனக் குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது மீதும் “தலைமகள்” என்னும் சொல்லைப் பயன்படுத்தப்பட்டது மீதும் எழுந்துள்ள குறைகூறல்களை பல்கலைக்கழகம் கருத்தில் கொண்டதாக கர்ட்டின் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜினட் ஹாக்கெட் இன்று ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“‘தலைமகள்’ என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்தியது சிலரை புண்படுத்தியிருப்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.”
“நாங்கள் இனிமேலும் அந்தச் சொல்லைப் பயன்படுத்த மாட்டோம். மாற்றம் செய்த ஊடக அறிக்கையை நாங்கள் மீண்டும் வெளியிட்டுள்ளோம்”, என்றார் ஹாக்கெட்.
அந்தப் பல்கலைக்கழகத்தின் அதிகாரத்துவ முக நூல் பக்கத்தில் அந்த அறிக்கை சேர்க்கப்பட்டுள்ளது.
ரோஸ்மாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது மீது பல மலேசியர்களில் அந்த முக நூல் பக்கம் வழியாக தங்கள் வெறுப்பைக் காட்டியுள்ளனர்.
ரோஸ்மாவுக்கு அந்த பட்டம் வழங்கப்பட்டது மீது எழுந்துள்ள குறைகூறல்கள் பற்றிக் குறிப்பிட்ட ஹாக்கெட் பல்கலைக்கழகம் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
“மெச்சத்தக்க சேவை”
கர்ட்டின் பல்கலைக்கழகம், அந்தப் பல்கலைக்கழகத்துக்கும் சமூகத்துக்கும் சிறந்த சேவை வழங்கியுள்ளவர்களுக்கு அல்லது கல்வித் துறை மேம்பாட்டிற்கும் சிறந்த பங்காற்றியுள்ளவர்களுக்கும் அவர்களை அங்கீகரிக்கும் வகையில் கௌரவ விருதுகளை வழங்கும் பாராம்பரியத்தைக் கொண்டிருப்பதாக ஹாக்கெட் விளக்கினார்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் சம்பந்தப்பட்ட நடைமுறை வழியாக அந்த விருதுகளைப் பெறுகின்றவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த நடைமுறை, முன்மொழியப்படும் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படும் “போட்டி நடைமுறை அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“டத்தின் ஸ்ரீ ரோஸ்மா, பெர்மாத்தா பாலர் கல்வி மய்யங்களைத் தோற்றுவித்து அதற்கு உந்து சக்தியாக இருந்து வந்துள்ளார். அந்த மையங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தரமான தொடக்கக் கல்வி வழங்கப்படுகின்றது.”
“அந்த முயற்சி குழந்தைகளுக்கான தொடக்கக் கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. அதனால் அவை சார்ந்துள்ள சமூகங்களும் இறுதியில் நன்மை அடைகின்றன. இப்போது 600க்கும் மேற்பட்ட பெர்மாத்தா மையங்கள் இயங்குகின்றன. அதில் பத்தாயிரக்கணக்கான பிள்ளைகள் பயிலுகின்றனர்.”
அந்த பட்டம் வழங்கப்பட்டது பல தரப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கிய தனது முடிவில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது”, என ஹாக்கெட் சொன்னார்.
ரோஸ்மாவுக்கு பட்டம் வழங்கப்பட்டது மீது அந்தப் பல்கலைக்கழகத்தின் முகநூல் பக்கத்தில் பல மலேசியர்கள் புகார்களைச் சேர்த்த பின்னர் ஹாக்கெட்-டின் அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த விருது தகுதி இல்லாமல் கொடுக்கப்பட்டு விட்டதாக சிலர் கூறிக் கொண்ட வேளையில் ரோஸ்மாவின் பின்னணியையும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் பல்கலைக்கழகம் பூசி மெழுகி விட்டதாக கூறினர்.