அரசாங்கத்தில் காணப்படும் வர்த்தகமும் பண அரசியலும் நாட்டுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதன் விளைவாக அரசியல் ஆதரவு, அதிகாரம், தேர்தல் நடைமுறை ஆகியவற்றிலிருந்து வர்த்தகத்தை பிரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று கோலாலம்பூரில் உள்ள அரச சிலாங்கூர் கிளப்-பில் நிகழ்ந்த நண்பகல் விருந்தில் கலந்து கொண்ட 200 உறுப்பினர்களிடம் உரையாற்றிய தெங்கு ரசாலி ஹம்சா அவ்வாறு கூறினார்.
“பொது வழக்கையில் ஊழல் மிக்க பணச் செல்வாக்கு அப்பட்டமாகத் தெரிகிறது,” என அவர் சொன்னார். அவரது உரையின் தலைப்பு மலேசிய அரசியல் பொருளாதாரமும் அனைத்துலக பொருளாதார நெருக்கடியும் என்பதாகும்.
“பொருளாதார சமூகப் பிர்சனைகள் அதிகரிக்கும் வேளையில் உருப்படாத அந்த முறையால் நன்மையடைந்தவர்களுக்கும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் இடைவெளி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.”
பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து அது மாறுபட்டது அல்ல. அதிகாரத்தினால் பயன் அடைந்தவர்கள் அந்த முறையை நிலை நிறுத்தினர். அதிகாரத்தைக் கைவிடுவதற்கு அல்லது மாறுவதற்கு அவர்கள் தயங்கினர்,” என ரசாலி மேலும் கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளை ஒப்பிட்டுப் பேசிய அவர்,” எந்த ஒரு முறையில்லாத ஜனநாயகமும் பொது உறவு நடவடிக்கைகள் மூலமும் பிரச்சார பாணியிலான ஊடகங்கள் மூலமும் எவ்வளவு அழகுபடுத்தினாலும் உண்மை நிலைகளை எதிர்த்து நிற்க முடியாது என்னும் பாடத்தை நாம் அரபு எழுச்சியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அதிகார அத்துமீறல், அளவுக்கு அதிகமாக செல்வத்தை குவிப்பது ஆகியவற்றால் ஏற்படும் இயற்கையான விளைவுகளே அவை”, என்றார்.
“அரபு எழுச்சி நமக்கு தந்துள்ள இதுதான் முக்கியமான செய்தி என நான் நினைக்கிறேன். நாம் அதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.”
“அரசியலும் வர்த்தகமும் ஒன்றாகக் கலந்து மிகுந்த ஆதிக்கத்தைப் பெறும் போது சித்தாந்தம் கொண்டுள்ள அதே செல்வாக்கை அவை பெற்று விடக் கூடிய அபாயத்தை நாம் எதிர்நோக்குகிறோம்.”
“நாம் நமது அரசியல் விவாதங்களிலும் தேர்தல் நடைமுறையிலும் ஜனநாயகக் கோட்பாடுகளை மீண்டும் நிலை நிறுத்த வேண்டுமானால் வர்த்தகம் அரசியலிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்,” என்று ரசாலி வலியுறுத்தினார்.