அன்வார் தமது கருத்துக்களை மீட்டுக் கொள்ள வேண்டும் அல்லது நீக்கப்படலாம் என எச்சரிக்கை

இஸ்ரேல் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த சர்ச்சைக்குரிய அறிக்கை மீது தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பினாங்கில் அவருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல முஸ்லிம் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ள அந்தப் பேரணி டோபி காட் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் நடைபெறும்

இஸ்ரேலுக்கான ஆதரவை அன்வார் மீட்டுக் கொள்ள வேண்டும் என அப்போது கேட்டுக் கொள்ளப்படும். இல்லை என்றால் அவர் பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து நீக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்படும்.

அன்வார் அவ்வாறு செய்யத் தவறினால் பக்காத்தானில் உள்ள தனது உறுப்பியத்தை பாஸ் கைவிட வேண்டும் என்றும் அந்த அமைப்புக்கள் கேட்டுக் கொள்ளும். அமைதியாக நடத்தப்படும் அந்தப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பாஸ் உறுப்பினர்களையும் அந்த முஸ்லிம் அமைப்புக்கள் அழைத்துள்ளன.

மலேசியாவில் முஸ்லிம் தலைவர் என்னும் தமது தோற்றத்தை அன்வார் களங்கப்படுத்திக் கொண்டு விட்டார் என பினாங்கு மலாய் காங்கிரஸின் தலைவர் ரஹ்மாட் இஷாஹாக் கூறினார்.

அந்த விவகாரத்தை உள்ளூர் அரசியல்வாதிகள் அரசியல்மயமாக்கி இருக்கலாம் எனக் குறிப்பிட்ட  அவர் அனைத்துலகத் தலைவர்களும் கூட அன்வாரை கண்டித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அன்வார் விளக்கமளிப்பதற்கு ஒரு வார காலம் அவகாசத்தை அந்த அரசு சாரா அமைப்பு வழங்கியுள்ளது. இல்லை என்றால் அவர் மக்களுடைய கோபத்துக்கு இலக்காக நேரிடும். அத்துடன் அவருக்கான ஆதரவும் சரியும் என அது கூறியது.

“மலாய் முஸ்லிம் தலைவர் என்னும் தனது தோற்றத்தை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்வதற்கு அன்வார் விரும்பினால் அவர் தமது இஸ்ரேலிய அறிக்கை மீது நியாயமான பொருத்தமான விளக்கத்தை வழங்க வேண்டும்,” என ரஹ்மாட் இஷாஹாக் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

“இஸ்ரேலிய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து முயற்சிகளையும்” தாம் ஆதரிப்பதாக ஏசியன் வால் ஸ்டீரிட் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் அன்வார் கூறியதாக வெளி வந்த தகவல்கள் பற்றி அவர் கருத்துரைத்தார்.

பினாங்கு மலாய் காங்கிரஸ் நடுநிலையானது, சுயேச்சையானது என்றும் அவர் கூறிக் கொண்டார்.