இன்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் மசீச தலைவர் சுவா சொய் லெக்கும் இடையில் நடக்கும் சொற்போர் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள வேளையில் சிலர் சொற்போர் இனச் சார்புடையது எனக் குறைகூறியுள்ளனர்.
ஆனால்,அந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகம் (அஸ்லி) அதை மறுக்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தைக் கருத்தில்கொண்டு அது நடத்தப்படவில்லை என்றது கூறியது.
சொற்போரின் தலைப்பு: ‘முடிவெடுக்கும் கட்டத்தில் சீனர்கள்: இருகட்சி அரசியலா, இரு இன அரசியலா? ஒரு நாள் மாநாட்டின் ஓர் அங்கம்தான் அந்தச் சொற்போர். ஆனால் அதுவே,மாநாட்டின் கவனத்தை ஈர்க்கும் அங்கமாக மாறியுள்ளது.
மாநாட்டின் முதல் அங்கம், மலேசியாவின் மாறிவரும் அரசியல் தோற்றத்தின்மீது கவனம் செலுத்துகிறது.இது எல்லா இனங்களுக்குமானது என்று அஸ்லி தலைமை செயல் அதிகாரி மைக்கல் இயோ தெரிவித்தார்.
“மாநாட்டில் இனவெறிக்கு இடமில்லை.எல்லா இனங்களுக்குமே நல்ல ஜனநாயகம் தேவை.நல்ல சமூக அமைப்பு தேவை”, என்று கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் இயோ கூறினார்.
“விவாதம் மட்டுமே சீனமொழியில் நடத்தப்படுகிறது. அதுவும் பினாங்கு முதல் அமைச்சர் (லிம்) கேட்டுக்கொண்டதால் அப்படிச் செய்யப்படுகிறது”, என்றாரவர்.
ஆனாலும், பார்வையாளர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கலாம்.
லிம், பகாசா மலேசியா அல்லது ஆங்கிலத்திலும் ஒரு சொற்போர் நடத்தலாமே என்று முன்மொழிந்திருக்கிறார். அப்படியொரு சொற்போருக்கு ஏற்பாடு செய்வதில் அஸ்லிக்குத் தடை ஏதுமில்லை என்று இயோ குறிப்பிட்டார்.
“அதற்குமுன் இன்றைய நிகழ்வைப் பார்ப்போம். அது வெற்றிகரமாக அமைந்தால் அடுத்ததைப் பற்றிப் பேசலாம்”, என்று அஸ்லியின் மூத்த உதவித் தலைவர் இங் யென் சீன் கூறினார்.
தலைப்பின்மீது பேச லிம்முக்கும் சுவாவுக்கும் ஆளுக்கு எட்டு நிமிடம் கொடுக்கப்படும் என்று இங் கூறினார். அதன்பின் கேள்வி நேரம். நடுவர் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்பார். அதனை அடுத்து பார்வையாளர்கள் கேள்வி கேட்க மூன்று நிமிடங்கள் ஒதுக்கப்படும். அது முடிந்து பேச்சாளர்கள் ஒருவர் மற்றவரிடம் கேள்விகளை முன்வைப்பர். இறுதியில் இருவரும் தொகுப்புரை வழங்குவார்கள்.
பொதுமக்களில் 200 பேர்தான் இந்நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர்களுக்குக் கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மசீசவுக்கும் டிஏபி-க்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் மாற்றமில்லை. ஒவ்வொன்றுக்கும் 200 இடங்கள்.
பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவரில் நடைபெறும் விவாதம் அஸ்ட்ரோ ஏஇசி-யிலும் யு-டியுப்பிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மாநாட்டைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தொடக்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில், அரசியலில் இரு தரப்புகளையும் சேர்ந்த முக்கிய பெருமக்கள், கெராக்கான் தலைவர் கோ சூ கூன், டிஏபி துணைத் தலைவர் டான் செங் கியாவ், கல்வி துணைஅமைச்சர் வீ கா சியோங் போன்றோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவார்கள்.
அரசியல் மாநாடு காலை மணி 9.30க்குத் தொடங்கும்.சொற்போர் மாலை மணி 5-க்கு.