கடந்த ஆண்டில் பொது வீடமைப்புத் திட்டக் குடியிருப்பாளர் சங்கங்களின் நடவடிக்கைக்காக கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் (டிபிகேஎல்) ஒதுக்கிய நிதி, கூட்டரசு பிரதேச மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சரின் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் இவ்வாறு கூறியுள்ளார்.
இன்று பங்சாரில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய நுருல் இஸ்ஸா, தம் தொகுதி குடியிருப்பாளர்கள்,பணத்துக்காக டிபிகேஎல்-லை அணுகியபோது டிபிகேஎல் கைவிரித்து விட்டதாகக் கூறினார்.
“அவர்கள் டிபிகேஎல்லிடம் சென்று தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைக் கேட்டதற்கு, அம்னோவின் ஏற்பாட்டில் அமைச்சர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வுக்காக அது செலவிடப்பட்டு விட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.
“நாங்கள் டிபிகேஎல் மேயரிடம் அது பற்றி வினவியதற்கு தாம் அரசு ஊழியர் என்றும் அமைச்சிடம்தான் அதைக் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்”, என்று நுருல் இஸ்ஸா கூறினார்.
குடியிருப்பாளர் சங்கத்துக்குப் பணம் எதுவும் மிச்சமில்லை
அபார்ட்மெண்ட் ஸ்ரீபுத்ரா குடியிருப்பாளர் சங்க செயல்குழு உறுப்பினர் அப்துல் ரகிம் முகம்மட் நூரும் இதை உறுதிப்படுத்தினார்.
“டிபிகேஎல்-லை நிதி தொடர்பில் தொடர்புகொண்டபோது ஒரு அதிகாரி ‘குடியிருப்பாளர்களுடன் நொங் சிக்’ என்ற தலைப்பில் அவ்வட்டார அம்னோ ஏற்பாடு செய்திருந்த இரு நிகழ்வுகளுக்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.”
மேலும், குடியிருப்பாளர் சங்கத்துக்காக ஒதுக்கப்பட்ட ரிம10,000-த்தில் மீதமிருந்த பணமும் மீலாது விழாவையொட்டி அங்குள்ள சூராவ் குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்காக செலவிடப்பட்டு விட்டது என்று அவ்வதிகாரி தெரிவித்ததாக அப்துல் ரகிம் கூறினார்.
குடியிருப்பாளர் சங்கங்களின் நடவடிக்கைகளுக்காக டிபிகேஎல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவது வழக்கம் என்றவர் சொன்னார்.
இவ்வாண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கத்தைவிட குறைவாக ரிம7,000 மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக அப்துல் ரகிம் தெரிவித்தார். குடியிருப்பாளர் சங்கம் இன்னமும் அந்தப் பணத்தைக் கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை.
கோலாலம்பூரின் மற்ற எம்பிகளைத் தொடர்புகொண்டு பேசியதில் தாங்கள் அப்படிப்பட்ட புகார்களைப் பெறவில்லை என்றனர்.
மலேசியாகினி டிபிகேஎல் அதிகாரிகளின் கருத்தை அறிய தொலைபேசி வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் முயன்றது. ஆனால்,முடியவில்லை.