கேர்ட்டின் பல்கலைக்கழகம் ரோஸ்மாவின் டாக்டர் பட்டம் மீதான முக நூல் கருத்துக்களை நிறுத்தி வைக்கிறது

கேர்ட்டின் பல்கலைக்கழக முக நூல் பக்கத்தில் பல நாட்களாக கண்டனம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த உயர் கல்விக் கூடம் தனது முக நூல் பக்கத்தில் கருத்துக்கள் தெரிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.

“பயனீட்டுக்கான நிபந்தனைகளும் முக நூல் நிபந்தனைகளும் தொடர்ந்து மீறப்படுவதாலும் 2006ம் ஆண்டுக்கான அவதூறுச் சட்டம், காமன்வெல்த் குற்றவியல் சட்டம் ஆகியவை மீறப்படும் அபாயம் இருப்பதாலும் எங்கள் ‘சுவரில்’ கருத்துக்கள் சேர்க்கப்படுவததத் தற்காலிகமாக நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு துரதிர்ஷ்டவசமாக வேறு வழி இல்லை,” முக நூலில் அந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு அந்தப் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் விருது மீது கருத்துத் தெரிவிக்கும் போது நாகரீகமாக நடந்து கொள்ளுமாறு இணையப் பயனாளிகளுக்கு பல முறை எச்சரிக்கப்பட்ட பின்னர் அது அவ்வாறு செய்துள்ளது.

“அனைவருக்கும், அந்த சுவரில் எழுதும் போது “கலந்துரையாடல் விதிமுறைகளை பின்பற்றுமாறு” நாங்கள் பல முறை வேண்டுகோள் விடுத்துள்ளோம்.”

“இப்போது தனிப்பட்ட ரீதியில் தாக்குதல்கள், வெறுப்பைப் பரப்புவது ஆகியவை அதிகமாகி இருப்பதால் 2006ம் ஆண்டுக்கான அவதூறு சட்டத்தின் கீழ் அந்த வகையான உள்ளடக்கத்தை அகற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”

“நாங்கள் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். மலேசியருக்கு கௌரவ விருது வழங்கப்பட்ட விவகாரம் மீது இந்தப் பக்கத்தில் மிக மரியாதையுடன் கருத்துத் தெரிவியுங்கள். இந்த முறை உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி,” என இடை நிறுத்தம் செய்யப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக வேண்டுகோள் கேட்டுக் கொண்டது.

கேர்ட்டின் பல்கலைக்கழக முக நூல் ‘சுவரில்’ பயனாளிகள் நேரடியாக கருத்துக்களை சேர்க்க முடியாது என்றாலும் பல்கலைக்கழகம் சேர்த்துள்ள அறிக்கை மீது இன்னும் கருத்துக் கூற முடியும்.

அந்த இடை நிறுத்த அறிவிப்பு பற்றிக் கருத்துரைத்த ஜெனிஷ் பாண்டியா என்ற பயனாளி, ” இந்த நிலைமையைக் கண்டு எனக்கு சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. நீங்கள் சமூக ஊடகம் வழியாக மாணவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகின்றீர்கள். ஆனால் அவர்கள் கருத்துக்களைச் சேர்க்கக் கூடாது என நீங்கள் சொல்கின்றீர்கள். சமூக ஊடகம் என்பது இரு வழிப் பாதையாகும். சேதத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பர்களே,” எனக் கூறினார்.

ரோஸ்மாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கிய பின்னர் ஒரு நாள் கழித்து திங்கட்கிழமை முதல் இணையம் வழியாக கேர்ட்டின் பல்கலைக்கழகத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

என்றாலும் அந்தப் பல்கலைக்கழகம் கருத்துக்களைச் சகித்துக் கொண்டதுடன் “தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தும் கருத்துக்களையும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் கருத்துக்களையும்” இன்று வரை நீக்கி வந்தது.

கேர்ட்டின் பல்கலைக்கழகச் சான்றிதழ்கள் எனத் தோன்றும் பத்திரங்கள் வெட்டப்படுவதை அல்லது எரிக்கப்படுவதைக் காட்டும் படங்களும் வீடியோக்களும் கூட இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.