பெக்கானில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவு நடைபெறவிருந்த பாஸ் தலைமையகத்தை நோக்கிச் செல்லும் முக்கிய சாலையில் போலீசார் சாலைத்தடுப்பு ஒன்றைப் போட்டதால் 5கிலோமீட்டர் தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதன் விளைவாக அன்வாரின் பேச்சைக் கேட்கச் சென்றவர்கள் “40 நிமிடத்துக்கு மேலாக” போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள நேரிட்டதாக கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.
“நானே, 3கிலோ மீட்டர் தொலைவிலிருந்து மோட்டார் சைக்கிளில்தான் சென்றேன். அன்வாரும் 5கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில்தான் வந்து சேர்ந்தார்”, என்றாரவர்.
போக்குவரத்து நெரிசலின் காரணமாக, நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியது,இதனால் அன்வாரின் உரை போலீஸ் அனுமதித்த நள்ளிரவு 12 மணி வரையறையைத் தாண்டிச் சென்றது.
“சரியாக 12 மணிக்கு போலீசார் வந்து விட்டார்கள். ஆனால்,நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியதைச் சுட்டிக்காட்டி நிகழ்ச்சியைச் சிறிது நீட்டிப்பதற்கு அனுமதி பெறப்பட்டது”, என்று சுல்கிப்ளி கூறினார்.
சுமார் 3,000பேர் அந்நிகழ்வுக்கு வந்திருந்தனர் என்று கூறிய சுல்கிப்ளி அவர்களில் பெரும்பாலோர் “உள்ளூர்காரர்கள்” என்றும் பெக்கானில் அவ்வளவு பெரிய கூட்டம் சேர்வது “வழக்கத்துக்கு மாறானது” என்றும் குறிப்பிட்டார்.
பெக்கான், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.முன்பு அத்தொகுதி அவரின் தந்தையும் மலேசியாவின் இரண்டாவது பிரதமருமான அப்துல் ரசாக் உசேனிடம் இருந்தது. அவர், 1976-இல் காலமானதை அடுத்து நஜிப் அதன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார்.