நேற்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கொள்ளைப்புறமாக விளங்கும் பகாங்கில் உள்ள பெல்டா குடியிருப்பு ஒன்றுக்குச் சென்றபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அண்மையில் மலாக்கா, மாச்சாபில் உள்ள பெல்டா நிலத்திட்டத்துக்கு அவர் சென்றபோது ஏற்பட்ட குழப்பம்போல் அல்லாது இங்குள்ள மக்கள் இருகரம் நீட்டி அவரை வரவேற்றனர்.
ஓராங் அஸ்லிகள் உள்பட 300-க்கு மேற்பட்டோர் அவரை வரவேற்றதுடன் அவரது உரையை ரசித்தனர். கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
கட்சி ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் அன்வாரின் செராமாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த இடத்துக்குச் செல்லும் சாலை நெடுகிலும் பாஸ், பிகேஆர், டிஏபி கொடிகளும் பதாகைகளும் காட்சியளித்தன.
இரண்டு வாகனங்களில் போலீசாரும்-ஒரு ரோந்து காரில் இருவர், எஸ்யுவி (SUV) வாகனம் ஒன்றில் நால்வர்-வந்திருந்தனர்.அவர்கள் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர குறுக்கிடவில்லை.
அன்வார் கூட்டத்தினரிடம் பல விவகாரங்களை விளக்கினார்.
இஸ்ரேல் பற்றிய தம் கருத்தையும் அவர் தற்காத்துப் பேசினார்.மும்பாயில், ஆசிய வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு வழங்கிய நேர்காணலில் தாம் கூறியதை அம்னோ திரித்துக்கூறியதாக அவர் குற்றம் சாட்டினார்.
“உத்துசான் மலேசியாவில் உள்ளவர்கள் ஆங்கிலம் படிக்காதவர்கள். அதனால், நான் சொன்னதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை”,என்று கேலி செய்தார்.
பாலஸ்தீனர்களின் உரிமைகளும் நிலமும் பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இஸ்ரேலை ஒரு நாடாக தம்மால் ஏற்க முடியும் என்று அந்நேர்காணலில் கூறியதாகவும் ஆனால் அந்த அம்னோ-ஆதரவு ஊடகம் அந்தப் பகுதியை விட்டுவிட்டது என்றும் அன்வார் விளக்கினார்.
தம்மைப் பற்றி அவதூறு பரப்புவதற்காக “அம்னோ பணம் கொடுத்து சில மக்கு உஸ்த்தாத்துகளை” வைத்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் சாடினார்.
தம் முன்னாள் அரசியல் குருவும் இப்போது கடும் விமர்சகராகவும் மாறியுள்ள டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் அவர் விட்டு வைக்கவைக்கவில்லை.
“அவரை நான் மன்னித்து விட்டேன்.ஆனால், அவர் விடமாட்டேன் என்கிறார்.வயதாகி விட்டது.பள்ளிவாசலுக்குப் போவதும் தொழுகை செய்வதுமாகவும் இருக்க வேண்டியதுதானே”, என்று குத்தலாகக் குறிப்பிட்டார்.
பிஆர்1எம் உதவித் திட்டத்தின்கீழ் ஒரு தடவை மட்டும் ரிம500 கொடுக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அன்வார் பக்காத்தான் ஆளுகையில் உள்ள மாநிலங்களில் பணம் வழங்கும் பல உதவித் திட்டங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
குடிமக்கள் இறந்துவிட்டால் ரிம2,500 உதவித் தொகை, மூத்த குடிமக்களுக்கு ரொக்க உதவி, பல்கலைக்கழக நுழைவுக்கு உதவி, இன்னும் பலவகை உதவிகள் பக்காத்தான் ஆளும் மாநிலங்களில் உள்ளன என்றவர் கூறினார்.
“நாங்கள் தேர்தலுக்குப் பின்னர் கொடுக்கிறோம்,பிஎன் தேர்தலுக்கு முன்னால் கொடுக்கிறது…. எங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மட்டுமே இதைச் செய்ய முடிகிறது. கூட்டரசு அரசாங்கம் எங்கள் கைகளில் இருந்தால்…நான் வாக்குறுதிகளை வாரிவழங்க விரும்பவில்லை. ஆனால், முதலில் எரிபொருள் விலையைக் குறைப்பேன்…”, என்றாரவர்.
புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற தாம் தயாராகிவிட்டதாகவும் அன்வார் கூறினார்.
“மாற்றரசுக் கட்சித் தலைவராக இங்கு நான் வருவது இதுவே கடைசித் தடவையாக இருக்கும்.அடுத்த முறை இங்கு வரும்போது வேறொரு பதவியில் இருப்பேன்”, என்றவர் கூறியதைக் கூட்டத்தினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.