நஜிப்: பிஎன் கொள்கைகள் கோடீஸ்வரர்களை உருவாக்கின

நாட்டில் இன்று இத்தனை கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர் என்றால் அதற்கு பிஎன் அரசின் சலுகைகள்தான் காரணம் என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.

“கோடீஸ்வரர்களின் பட்டியலைப் பார்த்தேன். ஒவ்வொருவரையும் உன்னிப்பாகக் கவனித்தேன்.அவர்களில் சிலர் இங்கும் இருக்கிறார்கள்.

“அவர்கள் செல்வந்தர்கள் ஆனார்கள் என்றால் அதற்கு எங்கள் கொள்கைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்துள்ளன”, என்றாரவர். நஜிப், “அரசியலில் முடிவெடுக்கும் கட்டத்தில் மலேசிய சீனர்கள்” மாநாட்டைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

நஜிப் தம் உரையில், மலேசியன் பிசினஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் மலேசியாவின் 30 பில்லியனேர்கள்( நூறு கோடி ரிங்கிட் அல்லது அதற்கும் மேலான மதிப்புள்ள சொத்து /பணமுள்ள மாபெரும் செல்வந்தர்கள்) பட்டியலைத் தொட்டுப் பேசினார்.

அப்பட்டியலின் முதல் மூன்று இடங்களில் ஹாங்காங்கில் தங்கியுள்ள ரோபர்ட் குவொக், எஸ்ட்ரோ தொலைக்காட்சி உரிமையாளர் ஆனந்த கிருஷ்ணன், பப்ளிக் பேங்க் நிறுவனர் தே ஹொங் பியாவ் ஆகியோர் உள்ளனர். 

“அவர்களுக்கு அரசாங்கக் குத்தகைகள் கிடைத்ததில்லை.அரசாங்கக் குத்தகை மூன்றாண்டுகளில் முடிந்து விடும்.பூமிபுத்ராக்களுக்குக் கிடைக்கிறது.ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பின் இன்னொரு குத்தகை வேண்டும் என்று வந்து நிற்பார்கள்.

“ஆனால் அவர்களுக்குச் சலுகைகள் கிடைத்தன.சலுகைகள் இல்லையென்றாலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தார்கள்.”

நாட்டில் பிஎன் உருவாக்கி வைத்திருந்த நிலைத்தன்மையால் அந்தக் கோடீஸ்வரர்கள் பெரிதும் பயனடைந்தனர் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

சீனர் சமூகத்தினர் தொழிலிலும் உழைப்பிலும் ஆர்வம் கொண்டவர்கள் என்று பாராட்டிய பிரதமர், வளர்ச்சிக்கு ஆதரவான கொள்கைகள் தொடர அவர்கள் பிஎன்னை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“கடுமையாக உழைக்கிறீர்கள். சிக்கனமாக இருக்கிறீர்கள்.அதனால் பணக்காரர்கள் ஆனீர்கள். வளர்ச்சிக்கு ஆதரவான ஓர் அரசாங்கத்தின்மீது நம்பிக்கை வைப்பதால் பயனடையப்போவது யார்? நீங்கள்தான்”, என்றவர் முழங்கினார்.

சீனப் பள்ளிகளின் காவலர் நஜிப் 

சீனப் பள்ளிகளைத் தேசியப் பள்ளிகளை மாற்றும் அதிகாரம் கல்வி அமைச்சருக்கு இருந்தது.இதனால் எந்த நேரத்திலும் சீனப்பள்ளிகள் எடுபடலாம் என்ற அச்சம் நிலவியது.அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் அமைச்சருக்கு இருந்த அந்த அதிகாரத்தை அகற்றிவிட்டதாக நஜிப் கூறிக்கொண்டார்.

“இன்று சீனப் பள்ளிகள் இருக்குமா இருக்காதா என்ற கேள்விக்கே இடமில்லை. அவற்றுக்கு நிதி கிடைப்பது, ஆசிரியர்கள் கிடைப்பது போன்றவைதான் பிரச்னைகளாக உள்ளன.

சீனர்களின் பங்களிப்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட நஜிப், தேர்தல் என்னும் சோதனையை முதல்முறையாக சந்திக்கப்போவதாகவும் அதில் அவர்கள் தமக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“மாநாட்டின் கருப்பொருள் கூறுவதுபோல் அரசியலில் முக்கிய முடிவெடுக்கும் கட்டத்தில் உள்ளோம்.

“நீங்கள் சரியான தேர்வைச் செய்ய வேண்டும். சரியான முடிவைச் செய்து எங்களால் நாட்டை மாற்றி அமைக்க முடியும் என்று எங்கள்மீது நம்பிக்கையும் வைத்தால் இந்நாட்டை உயர் வருமானம் பெறும் நாடாக்குவதில் நாங்கள் வெற்றி பெறுவோம்”, என்று நஜிப் குறிப்பிட்டார்.