ஷா அலாம் ஐ சிட்டி கேஎப்சி கடையில் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட டேனி இங்-கை கேஎப்சி மலேசியா நிர்வாகம் இன்று சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
அந்த விரைவு உணவு கடை கட்டமைப்பு “அன்றைய தினம் எங்கள் ஊழியர்கள் வழங்கிய திருப்தி இல்லாத சேவைக்கும் ஏற்படுத்திய அசௌகரியத்துக்கும் அங்கு இருந்த எங்களது எல்லா வாடிக்கையாளர்களிடமும் நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்,” என அந்த நிர்வாகத்தின் துணைத் தலைவர் அலன் ஆவ் வெளியிட்ட அறிக்கை கூறியது.
இங்-கும் அவரது குடும்பத்தினரும் இன்று பிற்பகல் கேஎப்சி நிர்வாகத்தைச் சந்தித்து மன்னிப்பை ஏற்றுக் கொண்டனர்.
“அந்தச் சம்பவம் நிகழ்ந்தது குறித்து நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம். அது வழங்கப்பட்ட சேவைத் தரத்துடன் தொடர்புடையது எனவும் வேறு எந்தக் காரணமும் இல்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதி அளிக்கிறோம்,” ஆவ் சொன்னார்.
அந்த விவகாரம் மீது ‘மதிப்புமிக்க’ கருத்துக்களைத் தெரிவித்த வாடிக்கையாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். “அது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க” எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.
அந்தச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் அதனை வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் சேர்த்து விட்டார். அது இன உணர்வுகளைத் தூண்டி விட்டது. கேஎப்சி கடையில் உள்ள மலாய் ஊழியர்களுக்கு எதிராக இனத் துவேஷ வார்த்தைகளை இங் சொன்னதாகக் கூட சிலர் கருத்துத் தெரிவித்தனர்.
ஆனால் இங் அதனை மறுத்ததுடன் தாம் வறுக்கப்பட்ட சிக்கனுக்காக ஒரு மணி நேரமாக வரிசையில் நின்று கொண்டிருந்த பின்னர் அது இல்லை என சொல்லப்பட்டதால் ஊழியர்களைத் தாம் திட்டியதாக மட்டும் குறிப்பிட்டார்.
இன்னும் அடையாளம் கூறப்படாத அந்த கேஎப்சி கடை ஊழியர் இங்-கை ‘பன்றி’ என அழைத்ததாகவும் சொந்தமாக சிக்கனை சமைத்துக் கொள்ளுமாறும் கூறிய பின்னர் இங்-கை குத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
இங் போலீசில் அந்த சம்பவம் மீது புகார் செய்துள்ளார். போலீஸ் இன்னும் அதனை விசாரித்து வருகிறது.
வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கேஎப்சி கடை ஊழியருடன் கண்டு பிடிக்க மலேசியாகினி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.