54 ஆண்டுகள் மலேசியர்கள் நம்பிக்கையோடு வாக்களித்தும் நியாயமான சமூக பொருளாதார உரிமைகளைப் பாகுபாடின்றி நிலை நிறுத்த அம்னோ தலைமையிலான பாரிசன் நேசனல் கூட்டணி தவறிவிட்டதால் அடுத்த 13 ஆம் பொதுத் தேர்தலில் அதற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரைகளை நாடெங்கும் நடத்தி வரும் “எதுவாயினும் அம்னோ மட்டும் வேண்டாம்” – அபு (ABU) என்ற இயக்கத்துடன் இணைந்து பேராக் மாநில இண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கம் பொது கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருப்பதாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ரமேஷ் தெரிவித்தார்.
இவ்விரு இயக்கங்களும் சேர்ந்து நடத்தும் இந்த மூன்றாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி சனிக்கிழமை இரவு மணி 8.00 க்கு ஈப்போ, புந்தோங் கம்போங் பாரு வட்டாரத்தில் அமைந்திருக்கும் டேவான் செர்பகுணா மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக இண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய செயலாளருமான திரு ரமேஷ் குறிப்பிட்டார்.
இப்பொதுக்கூட்டத்தில் மலேசிய இந்தியர்கள் எப்படியெல்லாம் இத்தனை காலமும் கல்வித்துறையில், வியாபாரரீதியில், வீட்டுடைமை திட்டங்களில், நில விவகாரங்களில், ஆலயப் பிரச்சனைகளில், அடையாள மற்றும் பிறப்புப் பத்திர மறுப்பு மற்றும் இன்னும் பல அவலங்களில் நியாயமான அடிப்படை சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டதால் சிக்கி தவிக்கிறார்கள் என்பது பற்றி உரைகள் நிகழ்த்தப்படும் என்றார் அவர்.
வாக்குரிமை என்பது நமது பிறப்புரிமை. இத்தனை ஆண்டுகளும் ஒரு சில சுயநலவாதிகளின் தித்திக்கும் வெற்று வாக்குறுதிகளை நம்பி நாம் ஏமாந்தது போதும். தங்களின் அரசியல் இச்சைக்காக நம் வாக்குகளை கபடத்தனமாக கவர்ந்து கொண்ட அரசியல் முதலைகளிடம் இம்முறை நாம் வெகுமிகு கவனமாக இருக்க வேண்டும்.
நம்முடைய வாக்குகள் யாரையோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குவதற்கோ, சட்ட மன்ற உறுப்பினர் ஆக்குவதற்கோ, அல்லது கவுன்சிலர்கள் ஆக்குவதற்கோ மட்டும் இதுநாள் வரையில் வீணடிக்கப் பட்டது போதும். ஒவ்வொரு இந்தியரும் வாக்களிக்கும் போது இத்தனை ஆண்டுகள் நாம் இழந்த சமூக பொருளாதார உரிமைகளை யார் மீட்டெடுப்பார்கள், தமக்காக, இந்நாட்டின் குடிமகனாக, தன்னுடைய உரிமைக்காக குரல் கொடுக்க முடியாத, குரல் கொடுக்கத் தெரியாத, சராசரி ஏழை இந்தியனுக்காக நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பதவிகளை துச்சமாக எண்ணி குரல் கொடுக்க யார் முன்வருகிறார்கள் என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து வாக்கு என்ற அஸ்திரத்தை இம்முறை அறிவுபூர்வமாகப் பிரயோகம் செய்ய வேண்டும். இதற்கு நம் இந்தியர்களை தயார் படுத்தவே இந்த மாநாடு நடத்தபடுகிறது என்று ரமேஷ் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு, இண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் நா.கணேசன், தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.சம்புலிங்கம், அபு ஒருங்கிணைப்பாளர் ஹரிஸ் இப்ராஹீம் மற்றும் செகு பாட் (SAMM ) ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர் . ஈப்போ மற்றும் புந்தோங் வட்டார வாழ் இந்தியர்கள் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு திரு ரமேஷ் அழைப்பு விடுத்தார். தொடர்புக்கு 012 469 6068 / 012 584 5181.
இத்தகவலை இண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் வி. செம்புலிங்கம் வெளியிட்டார்.