மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மற்றும் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சொற்போர் காட்டமாக இருந்த போதிலும், இருவரும் அடிக்கடி தாங்கள் பேச வேண்டிய தலைப்பிலிருந்து விலகிச் சென்று வேறு விசயங்களை நுழைத்தனர்.
“திருப்புமுனையில் சீனர்கள் – இரு கட்சி முறை இரு இன முறையாகி வருகிறதா? என்ற தலைப்பிலான சொற்போர் எதனையும் புதிதாக முன்வைக்கவில்லை. மாறாக பல்வேறு செராமாக்களில் பேசப்பட்ட விவகாரங்களை இருவரும் மீண்டும் மீண்டும் கூறினர்.
சுவாவின் விவாதம் இரு கூறுகளைக் கொண்டிருந்தது – பாஸ் கட்சியின் இஸ்லாமிய நாடு திட்டத்தை டிஎபியால் தடுக்க முடியாது மற்றும் டிஎபி சீனர் சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது.
பினாங்கு மாநில அரசை வழிநடத்தும் லிம், பினாங்கு அரசின் வெற்றிகளை முன்வைத்து அது பக்கத்தானின் கொள்கைகள் வெற்றிகரமாக செயலாக்கக் கூடியவை என்பதை நிரூபிக்கின்றன என்று வாதாடினார்.
சுவாவின் விவாதம் மிகக் காட்டமாக இருந்த வேளையில் லிம் அவரது வழக்கமான தெருச்சண்டைக்காரர் பாணிக்கு மாறாக அமைதியாக, பதற்றமற்ற, புண்ணகை தவழும் பாணியைக் கொண்டிருந்தார்.
இரு தரப்பினரும் தலா சுமார் 200 ஆதரவாளர்களைக் கொண்டு வந்திருந்தனர். அவர்கள் விவாதத்தின் போது மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தும், சத்தமிட்டுக்கொண்டும் இருந்தனர்.
அசம்பாவிதங்கள் நடக்கக்கூடும் என்று கருதிய ஹோட்டல் பணியாளர்கள் முன்எச்சரிக்கையாக மண்டபத்தில் மேசைகள் மீதிருந்த கண்ணாடி பாத்திரங்களை அகற்றி விட்டனர்.
இரு தரப்பினர்களின் ஆதரவாளர்களும் மாறி மாறி சுவாவையும் லிம்மையும் ஏளனம் செய்து கூச்சம் போட்டுக் கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் நடுவர் டாங் ஆ சாய் இருதரப்பினரையும் அமைதி காக்கும்படி வலியுறுத்த வேண்டியதாயிற்று.
சுற்று 1: சுவா
சொற்போரின் முதல் பேச்சாளரான சுவா, டிஎபி எப்போதும் “பெரிதாக பேசுகிறது” ஆனால் பாஸ் கட்சியின் இஸ்லாமிய நாடு திட்டத்தை நிறுத்த முடியவில்லை என்றார்.
மேலும், பினாங்கில் டிஎபி முதலமைச்சர் இருப்பதைப்போல் இதர மாநிலங்களிலும் அவ்வாறு செய்ய முடியும் என்று அக்கட்சி சீன வாக்காளர்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாரவர்.
பதிலளித்த லிம், பிஎன் முரண்பாடான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பாஸ் கட்சிக்கு டிஎபி கட்டளையிடுகிறது என்று அம்னோ கூறிவரும் வேளையில், டிஎபி பாஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மசீச கூறுகிறது என்றார்.
பக்கத்தானின் மூன்று பங்காளி கட்சிகளும் ஒன்றை மற்றொன்று சுரண்டுவதில்லை. மாறாக மக்கள் எவ்வாறு அக்கட்சிகளை பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதில் கவனம் செலுத்துகிறது என்றார் லிம்.
அம்னோவின் கீழ் மலேசியா இன அடிப்படையில் பிளவுபட்டிருக்கிறது. அதனால்தான் பக்கத்தான் சீர்திருத்தங்களையும் இரு கட்சி முறையையும் கொண்டுவர முயன்று வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
“அம்னோவுக்கு ‘மலாய்க்காரர்களின் மேளாண்மை’ என்று மட்டும் கொக்கரிக்கத் தெரியும். அதனை மசீச பார்க்க அல்லது கேட்கவில்லையா? பக்கத்தான் பரப்பி வருவது ‘மக்கள் மேளாண்மை’ ” என்று லிம் கூறினார்.
சுற்று 2: நடுவரின் கேள்வி
இச்சுற்றில் நடுவர் டாங்கின் கேள்விக்கு இருவரும் பதில் அளிக்க வேண்டும். அவரது கேள்வி: 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலிருந்து சமுதாயம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. எதிர்தரப்பின் ஆதரவை நீங்கள் எவ்வாறு பெறுவீர்?
இக்கேள்விக்கு நேரடியாக பதில் அளிப்பதைத் தவிர்த்துவிட்ட சுவா, தாங்கள் தோல்வி கண்ட தொகுதிகளைக் கைவிட்டு விட்டதாக பக்கத்தான் கட்சியினரைத் தாக்கினார்.
“(தோற்றதும்) அவர்களின் அலுவலகங்கள் கூட மூடப்பட்டு விட்டன”, என்று கூறிய சுவா, இரு கட்சி முறை என்பது வெறும் அரசியல் கூப்பாடு என்றார்.
லிம் இப்படி பதில் அளித்தார்: பக்கத்தான் அதன் கொள்கைகளை பரப்பும். ஆட்சி செய்வதற்கு அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், மலேசியா நடைமுறையிலிருக்கும் தற்போதைய “போலீஸ் நாடாக” (“police state”) இல்லாமல் ஒரு “கொள்கை நாடாக” (“policy state”) மாற்றம் காணும்.
சுற்று 3: பார்வையாளர்களின் கேள்வி பதில்
பார்வையாளர்களாக கலந்துகொண்டவர்களின் கேள்வி-பதில் வேளையில், மசீச ஆதரவாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதோடு பேச்சின் தலைப்புக்கு அறவே சம்பந்தமற்ற கேள்விகளைக் கேட்டனர்.
பாஸ் கட்சியின் இஸ்லாமிய நாடு திட்டம் மற்றும் கெடா மாநில அரசு பற்றிய கேள்விகளை லிம்மிடம் எழுப்பினர்.
2008 ஆம் ஆண்டில் பக்கத்தான் சில மாநிலங்களின் ஆட்சியைப் பிடித்த பின்னர், மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மக்கள் உணர முடிந்தது என்று லிம் பதில் அளித்தார்.
நெடுஞ்சாலை டோல் கட்டணங்கள் அகற்றப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த லிம், அது சம்பந்தப்பட்ட வாக்குறுதிகள் பக்கத்தான் மத்திய அரசை எடுத்துக்கொண்ட பின்னர் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்றார்.
ஆனால், வாகனமோட்டிகள் சுங்கை நெய்யூர் டோல் சாவடியைத் தவிர்த்து செல்வதை அனுமதிப்பதற்காக ஒரு தனிப்பட்ட சாலையை அமைப்பதற்கு பினாங்கு மாநில அரசு உதவியுள்ளது என்றார்.
கேள்விக்கு சுவா பதில் அளிக்கத் தொடங்கியபோது டிஎபி ஆதரவாளர்கள் குறுக்கிட்டு தங்களுடைய தரப்பினர் கேள்விகள் கேட்பதற்கு தயாராக ஒரு பகுதியில் இருப்பதை நடுவர் கவனிக்கத் தவறிவிட்டார் என்றனர்.
நடுவர் டாங், சுவாவை தொடருமாறு கேட்டுக்கொண்டதும், பேராக் மாநிலத்தில் 11 மாதகாலத்திற்கு ஆட்சியிலிருந்த போது டிஎபி சீனப்பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கப்படும் என்று அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றார்.
சுற்று 4: ஒருவருக்கு தலா ஒரு கேள்வி
இச்சுற்றில் ஒருவர் மற்றொருவருக்கு ஒரு கேள்வி கேட்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
லிம் கேட்டார்: “போர்ட் கிள்ளான் சுங்கவரி அற்ற பகுதி சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தில் மசீச தலைவர்கள் மீது மட்டுமே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைக் காண்கிறோம். அம்னோ தலைவர்களுக்கு அவற்றிலிருந்து விதிவிலக்கா?”
பதில் அளித்த சுவா, ஏன் இந்த விவகாரத்தில் சீனர்கள் மட்டும் கைது செய்யப்பட்டனர் என்று லிம் கேட்டதற்காக, அவர் இனவாதத்தை எழுப்புவதாக குற்றம் சாட்டினார்.
அடுத்து சுவா, நாட்டை “உயர்வருமானம் பெறும் நாடாக” ஆக்குவதற்கு பக்கத்தான் என்ன திட்டங்கள் வைத்துள்ளது என்று லிம்மிடம் கேட்டார்.
இக்கேள்விக்கு லிம் மீண்டும் பினாங்கு மாநிலத்தைச் சுட்டிக் காட்டி விவேகமாக நிறுவாகம், வெளிப்படையான டெண்டர் முறை மற்றும் ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை ஆகியவை அம்மாநிலத்தின் வருமானத்தை அதிகரித்துள்ளது என்றார்.
சுற்று 5: நிகழ்ச்சி முடிவுற்றது
கேள்வி-பதில் அங்கத்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் டிஎபி மற்றும் மசீச ஆதரவாளர்களுக்கிடையில் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
நிகழ்ச்சியை முடித்து வைக்கும் உரையில், மசீசவை தாக்கிய லிம், அம்னோவுக்கு ஈடுகொடுத்து அதனை எதிர்த்து நிற்க மசீச தயாராக இருக்கிறதா என்று கேட்டார்.
“மசீச முன்னாள் தலைவர் ஓங் தீ கீட் மசீசவுக்கு சிறு ரொட்டித் துண்டுகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்” என்று சுட்டிக் காட்டிய லிம் அரசாங்கத்தில் பதவிகளில் இருந்தும் மசீச பற்களற்றதாக இருக்கிறது என்று சாடினார்.
சுவாவின் மீது லிம் விடுத்த இறுதிக் குத்து: “பாஸ் ஒரு சீனரைக்கூட கொன்றதில்லை. இது உண்மையாகும்” என்று தியோ பெங் ஹோக்கின் மரணத்தை குறிப்பாகக்காட்டி கூறினார்.
லிம்மின் குத்துக்கு பதில் அளித்த சுவா, செய்தியாளர்களையும் டிஎபி ஆதரவாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஓங் தீ கியாட்டின் “சிறு ரொட்டித் துண்டுகள்” கருத்துக்கு ஓங்தான் காரணம் என்றார்.
“அதற்குக் காரணம் அவரால் (ஓங்) வழிநடத்த இயலவில்லை. அதனால்தான் அவர் ஓர் ஆண்டுக்குள் வெளியேற்றப்பட்டார்”, என்று சுவா கூறியதும் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். ஆனால், டிஎபியினர் குழம்பிப்போய் விட்டனர்.
சில டிஎபி ஆதரவாளர்கள் அது “மசீசவின் உட்போராட்டம்”, என்று குரல் எழுப்பினர்.
நடுவர் டாங் சொற்போரை முடிவிற்கு கொண்டு வந்ததும், சுவா, லிம் இருந்த இடத்திற்கு சென்று கைகோர்த்து நின்று படம் எடுத்த பின்னர் ஒன்றாக வெளியேறினர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர், மூத்த அரசியல் ஆய்வாளர் கூ கே பெங் இரு பேச்சாளர்களும் கொடுக்கப்பட்ட தலைப்பிலிருந்து விலகிச் சென்றுள்ளனர் என்றாலும், இச்சொற்போர் ஒரு நல்ல முயற்சி என்று மலேசியாகினியிடம் கூறினார்.
மலேசிய அரசியல்வாதிகள் பகைமைப் போக்கை குறைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இச்சொற்ப்போரில் வென்றவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்நிகழ்ச்சியில் பெரும் தோல்வி கண்டவர்கள் மிகப் போக்கிரித்தனமாக நடந்துகொண்ட இரு தரப்பினரின் ஆதவாளர்கள்தான் என்பது வலைமக்கள் மற்றும் செய்தியாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.