பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில் 10விழுக்காட்டை சுகாதாரக் காப்புறுதித் திட்டமான 1பராமரிப்புத் திட்டத்துக்குச் செலுத்த வேண்டியிருக்காது என்று சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய் நேற்று அறிவித்தார்.
“அது அரசின் எண்ணமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.சம்பளத்தில் 10விழுக்காட்டைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்”, என்றாரவர்.
மாற்றரசுக் கட்சியினர் 1பராமரிப்புத் திட்டம் பற்றி வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பிக் குழப்பத்தை உண்டுபண்ணி வருகிறார்கள் என்றாரவர்.
“ஒரு குடும்பம், அதன் வருமானத்தில் சராசரி 9.5விழுக்காட்டை உடல்நலப் பராமரிப்புக்குச் செலவிடுவதாக எங்கள் ஆய்வுகள் காட்டுவதாகக் கூறியதை நாங்கள் பொதுமக்களுக்கு 10விழுக்காடு வரி விதிக்கப்போகிறோம் என்று எதிர்த்தரப்பினர் கதைகட்டி விட்டார்கள்.”
நேற்று “முடிவெடுக்கும் கட்டத்தில் சீனர்கள்” மாநாட்டில் கலந்துகொண்ட லியோ, அதில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
1பராமரிப்புத் திட்டத்தில் மலேசியர் அனைவரும் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டியிருக்கும் என்று அண்மையில் சுகாதார அமைச்சின் தேசிய சுகாதார நிதியளிப்புப் பிரிவுத் துணை இயக்குனர் டாக்டர் ரொசிட்டா ஹலினா கூறியிருந்தார். ஆனால், அரசாங்கம் அதற்கு ஒரு செயல்திட்டத்தை இன்னும் வரையவில்லை.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது வேலைசெய்யும் ஒவ்வொருவரும் வருமானத்தில் ஒரு பகுதியை அதற்குச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கருதப்பட்டது.
ஆனால்,விமர்சகர்கள் அது வேண்டியவர்களுக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் என்றும் அதில் ஆதாயம் தனிப்பட்டவர்களைச் சென்றடையும் இழப்புகளைப் பொதுமக்கள் ஏற்க வேண்டியிருக்கும் என்றும் கூறினர்.