டாக்டர் பட்டத்துக்குப் பணமா? மறுக்கிறார் ரோஸ்மா

பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், பிப்ரவரி 12-இல் கர்டின் பல்கலைக்கழகம் வழங்கிய கெளரவ டாக்டர் பட்டத்தைப் பணம் கொடுத்து வாங்கியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார்.

“கர்டின் விருதைப் பணம் கொடுத்து வாங்கியதாக சிலர் கூறுகிறார்கள்.அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

“ஒருவேளை  அவர்களுக்கு (பட்டங்களை)ப் பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் இருக்கலாம். அதனால்தான் நான் கெளரவப் பட்டத்துக்கு பணம் கொடுத்ததாகக் கூறுகிறார்கள்.

“எனக்கு ஒரு பிஎச்டி பட்டம் இருக்கிறதா, இல்லையா என்பது ஒரு பிரச்னையே அல்ல. கர்டின் கொடுத்தது. நான் பெற்றுக்கொண்டேன்”, என்றாரவர்.

நேற்று சித்தியாவங்சாவில்  வீரானித்தா பெர்காசா நிதிதிரட்டும் நோக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில் கலந்துகொண்ட ரோஸ்மா, அவர்கள் சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள் என்றார்.

அந்நிகழ்வில் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலியும் ரோஸ்மாவுக்கு ஆதரவாக பேசினார்.ரோஸ்மா “புகழ்பெற்று” வருவதைக் காணப் பொறுக்காத மாற்றரசுக் கட்சியினர் அவரைக் குறிவைத்துத் தாக்கி வருகிறார்கள் என்றாரவர்.

பொதுமக்கள் நினைப்பதுபோல் பெர்காசா இனவாத அமைப்பல்ல என்றும் இப்ராகிம் அலி கூறினார்.

“தேசிய ஒற்றுமை என்பது மலாய் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாய் நம்புகிறோம். எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முனைகிறோமே தவிர மற்றவர்களின் உரிமைகளை மறுக்கவில்லை”, என்றவர் கூற கூட்டத்தினர் பலத்த கைதட்டலுடன் அதை வரவேற்றனர்.

அதே கருத்தை வீரானித்தா பெர்காசா தலைவர் நோர்கைலா ஜமாலுடினும்  தம் உரையில் வலியுறுத்தினார். அரசியலமைப்பில் உள்ளதைப் பாதுகாக்கவே தாங்கள் போராடுவதாக அவர் கூறினார்.