பினாங்கு முதலமைச்சர்: நான் சொல்வது தவறு என மெய்பிக்கப்பட்டால் விலகத் தயார்

பினாங்கில் பாயான் முத்தியாரா நிலம் திறந்த டெண்டர் வழியாக அல்லாமல் பேச்சுகள் மூலம் விற்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இருந்தால் அரசியலிலிருந்து விலகிக் கொள்வதற்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் முன் வந்துள்ளார்.

ஜார்ஜ் டவுனுக்கு அருகில் பாயான் முத்தியாராவில் உள்ள 41.5 ஹெக்டர் நிலம் பினாங்கு அரசாங்கம் வெளியிட்ட போட்டி டெண்டர் மூலம் வாங்கப்பட்டதாக அதனை வாங்கிய Ivory Properties Group Berhad (IPGB) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“பினாங்கு அம்னோ தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மானிடம் ஏற்கனவே ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டது. புர்சா மலேசியா பங்குச் சந்தையின் அறிக்கையே அதற்கு ஆதாரம்.”

“அவர் ஆதாரத்தைக் காட்டியுள்ளார். ஆனால் ஐவரி அதனை மறுத்துள்ளது. ஐவரி விடுத்த அறிக்கையே அவரது ஆதாரம். ஆனால் திறந்த டெண்டர் மூலம் அதனைப் பெற்றதாக இன்று ஐவரி கூறியுள்ளது,” என லிம் சொன்னார்.

ஐவரி குழுமத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் வழி அந்த 41.5 ஹெக்டர் நிலம் 1.1 பில்லியன் ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டதற்கு தம்மிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறிய ஜைனல், லிம் அதற்காக அரசியலிலிருந்து விலக வேண்டும் என சவால் விடுத்துள்ளது பற்றி பினாங்கு முதலமைச்சர் கருத்துரைத்தார்.

“அந்த சவாலை விடுத்தது நான். நான் திறந்த டெண்டரைக் கோரவில்லை என்பதை அவர்கள் மெய்பிக்க முடியுமானால் அரசியலிலிருந்து ஒய்வு பெறத் தயார் என நான் சொன்னேன்.”

“ஆனால் அவர்கள் அதனை நிரூபிக்க முடியாவிட்டால் அவர்கள் ஒய்வு பெற வேண்டும்,” லிம், நேற்றிரவு மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்- உடன் சொற்போர் நடத்திய பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

அந்த நிலம் மிகவும் மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. பினாங்கு பாலம், தீர்வையற்ற வாணிகப் பகுதி., பினாங்கு அனைத்துலக விமான நிலையம் ஆகியவற்றுக்கு மிக அருகில் அமைந்துள்ளது அதற்குக் காரணமாகும்.

பெர்னாமா