மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-உடன் நடத்திய விவாதத்த்தின் போது தாம் கூறியதாக தவறாக வெளியிட்டுள்ள தகவலுக்கு தி ஸ்டார் நாலேடு மன்னிப்புக் கேட்பதுடன் அதனை மீட்டுக் கொள்ளவும் வேண்டும் என பினாங்கு முதலமச்சர் லிம் குவான் எங் கோரியுள்ளார்.
‘அவர்கள் சொன்னது என்ன” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் தாம் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக லிம் இன்று விடுத்த அறிக்கை கூறியது. அந்தச் செய்தி இன்று அந்த ஏட்டில் ஆறாம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
“பிரதமர் மலாய்க்காரராக இருக்க வேண்டும் என்பதைத் நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் மக்கள் முடிவு செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” எனத் தாம் கூறியதாக சொல்லப்படுவதை லிம் மறுத்தார்.
தி ஸ்டார் நாளேடு மசீச-வுக்குச் சொந்தமனது என்பதால் அது ‘ கட்சி சார்புடைய தொனியில் ‘பாகுபாடாக செய்திகளை’ வெளியிடும் என்பதை தாம் ஏற்றுக் கொண்டாலும் தாம் சொல்லாத ஒன்றை உருவாக்கி அதனை மேற்கோள் காட்டுவதை தாம் ஒப்புக் கொள்ள முடியாது என்றார் அவர்.
“நான் சொன்னதாக கூறும் அந்த மேற்கோள் பொய்யானது, உண்மையில்லாதது. ஏனெனில் நான் அந்த சொற்போரின் போது அந்த விஷயம் குறித்துப் பேசவே இல்லை.”
“அந்தச் சொற்போர் மண்டரின் மொழியில் நடத்தப்பட்டது. மசீச-வுக்கு தி ஸ்டார் சொந்தமானது என்பது ஒரு பக்கம் இருக்க ஆங்கில நாளேடு ஒன்று அதனைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறு என நான் எண்ண விரும்புகிறேன்,” என்றார் அவர்.
தி ஸ்டார் நாளேடு அந்தச் செய்தியை முழுமையாக மீட்டுக் கொள்வதுடன் அந்தப் பத்திரிக்கையில் அதே ஆறாம் பக்கத்தில் நன்கு தெரியும் பகுதியில் மன்னிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும் லிம் கோரினார்.