பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு புக்கிட் கெப்போங் சம்பவம் பற்றி கூறிய கருத்துக்கு எதிராக 49 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதால், அவர் மீது விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் படையின் துணைத் தலைவர் காலிட் அபு பகார் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி இதர போலீஸ் புகார்கள் குறித்து அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று வினவுகிறார் வர்காஅமனின் பொதுச் செயலாளர் பாரதிதாசன்.
புக்கிட் கெப்போங் சம்பவம் குறித்த தமது கருத்தைத் திரித்து கூறியதற்காக உத்துசான் மலேசியாவை முகமட் சாபு கடுமையாகச் சாடியிருப்பதை தாம் வரவேற்பதாக இருபது முக்கிய இந்திய அரசுசார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்ளும் பாரதிதாசன் ஒரு செய்தி அறிக்கையில் கூறியுள்ளார்.
இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் உத்துசான் மலேசியா, பெர்காசாவின் இப்ராகிம் அலி மற்றும் செனட்டர் முகமட் எஸ்ஸாம் முகமட் நோர் ஆகியோர் மீது வர்காஅமன் மற்றும் இதர அரசுசார்பற்ற அமைப்புகள் செய்துள்ள போலீஸ் புகார்கள் பற்றி ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் வினவுகிறார்.
“ஏன் இரட்டை வேடம்? போலீஸ் படையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுமா?”, என்று அவர் மேலும் வினவினார்.