பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் இஸ்லாமியத் தகுதிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அன்வாரைப் பெயர் குறிப்பிடாமல் பேசிய நஜிப், அந்த எதிர்க்கட்சித் தலைவருடைய அறிக்கைகள் முஸ்லிம் சமூகத்தில் சில பிரிவினருக்கு சினத்தை மூட்டியுள்ளது என்றார்.
“குறிப்பிட்ட தலைவர் ஒருவர் விடுக்கும் இயற்கைக்கு புறம்பான அறிக்கைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் பொருட்டு நாம் முஸ்லிம் நலன்களுக்குப் போராடுவது மிக முக்கியம்.”
“செக்ஸ் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பண்டைக் காலத்தவை என்பதால் அவை திருத்தப்பட வேண்டும் என அறிக்கை விடுக்கப்படும் போது மனிதர்களைக் கட்டுப்படுத்தக் கூடிய வழக்கமான சட்டங்களாக அல்லாவின் சட்டங்கள் உருமாற்றம் பெறக் கூடாதா என நாம் எண்ணுகிறோம்.”
“அல்லாவின் சட்டங்கள் பண்டைக் காலத்தவையா?” என அவர் கோலாலம்பூரில் உலாமாக்கள், இஸ்லாமிய அறிஞர்கள், இணைய எழுத்தாளர்கள் கலந்து கொண்ட தேசியக் கூட்டத்தில் வினவினார்.
“முஸ்லிம் அல்லாத நாடான சிங்கப்பூரில் கூட அந்தத் திருத்தம் அவசியமில்லை என அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இங்கு அந்தச் சட்டத்தைத் திருத்த விரும்பும் ஒரு தலைவர் இருக்கிறார்.”
ஒரினச் சேர்க்கைக்கான உரிமைகளைப் பொறுத்த வரையில் அன்வார் சம உரிமை வழங்கத் தயாராக இருக்கிறாரா என பிபிசி பேட்டி ஒன்றில் அண்மையில் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு மலேசியர்கள் பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான திருமணத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாகப் பதில் அளித்த அன்வார், தண்டனையை வழங்கும் பண்டைக்கால சட்டங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறினார்.
பக்காத்தான் கட்சிகள் ஒன்றோடு ஒன்று உறங்கிக் கொண்டிருக்கின்றன
“நமது நிலையின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஒன்றுபடுவது முக்கியமாகும். அந்த நிலை நமது போராட்டத்துக்கு ஏற்ப இல்லாத போது, பாலஸ்தீனப் பாதுகாப்பு இஸ்ரேலியப் பாதுகாப்புக்கு கீழே வைக்கப்படும் போது ஏதோ ஒன்று வினோதமாகத் தென்படுகிறது,” என்றார் நஜிப்.
பாலஸ்தீன மக்களுடைய அவாக்களுக்கு இஸ்ரேல் மதிப்பளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இஸ்ரேலியப் பாதுகாப்புக்கு அன்வார் ஏசியன் வால் ஸ்டீரிட் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் சொன்னதாகக் கூறப்படுவது பற்றி நஜிப் அவ்வாறு குறிப்பிட்டார்.
பக்காத்தான் ராக்யாட்டையும் பிரதமர் தமது உரையில் சாடினார். அவற்றுக்கு இடையிலான உறவுகளை நெறிமுறையற்றது என அவர் வருணித்தார்.
“ஒர் அரசியல் கட்சி, மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒரே தலையணையில் உறங்கும் போது அவை வெவ்வேறு கனவுகளைக் காண்கின்றன. ஆனால் அவை நெறிமுறையற்ற உறவுகளை கொண்டுள்ளன.”
நீங்கள் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கும் போது ஒரே தலையணையில் உறங்கும் கட்சிகள் நன்மையடையும்.”
“நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரிகிறதா? அதனை நான் மேலும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை,” என அவர் புன்னகையுடன் கூறினார்.
மலேசிய சீனர்கள் அரசியல் திருப்பு முனையில் என்னும் தலைப்பில் நேற்று நடத்தப்பட்ட மாநாடு பற்றிக் குறிப்பிட்ட நஜிப், அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் முஸ்லிம்களும் அதே திருப்பு முனையில் இருப்பதாகக் கூறினார்.
“சீனர்கள் அரசியல் திருப்புமுனை பற்றி சொற்போர் நடத்த முடியும் என்றால் முஸ்லிகளும் திருப்பு முனையில் இருக்கின்றனர். அவர்கள் இஸ்லாத்தின் வலிமைக்கும் புனிதத்தன்மைக்கும் உத்தரவாதம் அளிக்கக் கூடிய ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும்,” என்றார் பிரதமர்.