எதிர்க்கட்சிகளுடன் சொற்போர் நடத்த மஇகா ஆர்வம் கொண்டிருக்கவில்லை

அண்மையில் மசீச-வுக்கும் டிஏபி-க்கும் இடையில் நிகழ்ந்த விவாதத்தைப் போன்று எதிர்க்கட்சிகளுடன் எந்த விவாதத்தையும் நடத்த மஇகா எண்ணவில்லை என அதன் துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.

என்றாலும் எழுப்பப்பட்ட பல்வேறு விஷயங்கள் மீது இரண்டு கட்சிகளின் நிலைகளையும் கொள்கைகளையும் மக்கள் அறிந்து கொள்வதற்கு அந்த விவாதம் நல்ல மேடையாக அமையும் என அவர் சொன்னார்.

“மக்கள் இரண்டு கட்சிகளின் வெவ்வேறு கருத்துக்களையும் நிலைமைகளையும் நிலைகளையும் மக்கள் அறிந்து கொண்டு பொருத்தமான மதிப்பீடுகளைச் செய்வதற்கு அது நல்லதொரு வாய்ப்பு என நான் எண்ணுகிறேன்.”

“அத்தகைய விவாதத்தை நாங்கள் நடத்துவதற்கு அவசியமில்லை என நான் கருதுகிறேன். ஆனால் அதனைச் செய்ய விரும்பும் மக்கள் இருந்தால் அவர்கள் அதனை நடத்தலாம். நாங்கள் அதனை நடத்தப் போவதில்லை,” என ஜோகூர் பாருவில் உள்ள ஸ்கூடாய் பல நோக்கு மண்டபத்தில் ‘2012ம் ஆண்டுக்கான என் வாழ்க்கைத் தொழில்’ என்னும் விழாவை இன்று தொடக்கி வைத்த பின்னர் டாக்டர் சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறினார்.

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கிற்கும் பினாங்கு முதலமைச்சரும் டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங்-கிற்கும் இடையில் நேற்று நிகழ்ந்த சொற்போர் பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.

அந்த ஒரு மணி நேர விவாதத்தில் யாரும் வெற்றி பெறவில்லை, தோல்வி அடையவும் இல்லை என்றும் டாக்டர் சுப்ரமணியம் சொன்னார்.