தெங்கு அட்னான்: பிஎன்-னில் எந்தக் கட்சியும் மிரட்டப்படுவது இல்லை

பிஎன் இணக்க அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது. உறுப்புக்கட்சிகள் ஒன்றையொன்று மிரட்டுவது இல்லை என பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறுகிறார்.

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கிற்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கிற்கும் இடையில் நிகழ்ந்த விவாதம் பற்றிக் கருத்துரைத்த போது அவர் அவ்வாறு சொன்னார்.

எதிர்த்தரப்பைக் குறை கூறாமலும் குற்றம் சாட்டாமாலும் சீன சமூக மேம்பாட்டுக்கு மசீச-வும் பிஎன் -னும் ஆற்றியுள்ள பணிகளை சுவா நல்ல முறையில் வாதங்களை முன் வைத்தார் என தெங்கு அட்னான் தெரிவித்தார்.

“சீன சமூகம் திடீரென விழித்துக் கொண்டு தங்களுக்கு மசீச நிறையச் செய்துள்ளதையும் நாங்கள் எப்போதும் ஒன்றாக வேலை செய்து வருகிறோம் என்பதையும் உணரத் தொடங்கியிருப்பதை எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் காட்டுகின்றன.”

“தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். எந்த முடிவு செய்யப்பட்டாலும் அது இணக்க அடிப்படையில் எடுக்கப்படுகிறது. பிஎன்- னில்பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் எந்தக் கட்சியும் எதனையும் மிரட்டுவதில்லை,” என அவர் சொன்னார்.

அவர் இன்று தமது புத்ராஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் 1,600 பேருக்கு BR1M என்ற ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகையை வழங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

“சீனர்கள் அரசியல் திருப்புமுனையில்: இரு கட்சி முறை இரண்டு இன முறையாக மாறி வருகிறதா” என்னும் தலைப்பில் மண்டரின் மொழியில் டாக்டர் சுவா-வும் லிம்-மும் நேற்று சொற்போர் நடத்தினர்.

தொகுதி மாற்றம்

பிஎன் மட்டுமே தங்களது நலன்களைக் கவனித்து வளப்பத்தைக் கொண்டு வர முடியும் என்பதை மலாய், இந்திய சமூகங்கள் உணர்ந்துள்ளது போன்று சீன சமூகமும் உணரத் தொடங்கியுள்ளதாக அம்னோ தலைமைச் செயலாளருமான தெங்கு அட்னான் சொன்னார்.

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் தொகுதிகளை மாற்றிக் கொள்வது மீது பிஎன் உச்ச மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் துணைப் பிரதமர் முஹடின் யாசினும் ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, சபா, சரவாக் ஆகியவற்றுக்கான பயணங்களை முடித்துக் கொண்ட பின்னர் அந்த விவகாரம் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அம்னோ தனது வேட்பாளர் பட்டியலை இறுதி முடிவு செய்து விட்டதா என்றும் தெங்கு அட்னானிடம் வினவப்பட்டது. அதற்கு  பதில் அளித்த அவர் “அது மிகவும் ரகசியம். பொறுமையாக இருங்கள். நான் ஆமாம் என்றோ இல்லை என்றோ கூறவில்லை. பொறுமையாக இருங்கள்,” என்றார்.