ஜோகூரில் உள்ள செம்பெரோங் நாடாளுமன்றத் தொகுதிக்கு நேற்று எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வருகை அளித்தார். அங்கு அவருக்கு அம்னோ ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்ப்புக் காட்டினர்.
அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய மெர்சிடிஸ் கார் மீது அவர்கள் கற்களை வீசினர். அதனால் அந்த காரின் முன் கண்ணாடி நொறுங்கியது. கார் கதவு ஒன்றும் சேதமடைந்தது.
ஒரு காலத்தில் துணைப் பிரதமராக இருந்த அன்வாரை நோக்கி அவர்கள் ஆபாச சொற்களை உரத்த குரலில் சொன்னதுடன் வாய்மொழியாகவும் வசை பாடினர்.
அந்தச் சம்பவத்தில் அன்வாருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பிகேஆர் கட்சி ஏடான சுவாரா கெஅடிலான் கூறியது.
செம்பெரோங் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் வசமுள்ள நாடாளுமன்றத் தொகுதி ஆகும். ஹிஷாமுடின் முன்னாள் பிரதமர் ஹுசேன் ஒன் -னின் புதல்வரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சித்தியின் புதல்வரும் ஆவார்.
பொதுத் தேர்தல் நெருங்கி வருவதைக் கருத்தில் கொண்டு அன்வார் கடந்த சில வாரங்களாக பாரம்பரியமாக பிஎன் கோட்டைகள் எனக் கருதப்படும் கிராமப்புறப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
கடந்த திங்கிட்கிழமை அவர் அலோர் காஜா, மாச்சாப்பில் உள்ள காபார் பாபா பெல்டா நிலக் குடியேற்றத் திட்டத்துக்கு வருகை அளித்தார். அங்கு அம்னோ ஆதரவாளர்கள் ரௌடித்தனமாக நடந்து கொண்டு அவரது செரமாவைச் சீர்குலைத்தனர்.
கடந்த வெள்ளிக் கிழமை நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த ஊரான பெக்கானில் சாலை தடுப்புப் போடப்பட்டதால் ஏற்பட்ட ஐந்து கிலோமீட்டர் நீள போக்குவரத்து நெரிசலை முறியடிக்கும் பொருட்டு அன்வார் செராமா நிகழும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டியிருந்தது.
நேற்றைய செம்பெரோங் சம்பவம் மீது ஜோகூர் பிகேஆர் போலீசில் புகார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.