நிதி முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் சிலாங்கூரில் உள்ள அரசுதொடர்புடைய இரண்டு நிறுவனங்கள்(ஜிஎல்சி)மீது அடுத்த மாதம் விசாரணை மேற்கொள்ளப்படும்.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்கீழ் உள்ள அந்நிறுவனங்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு வழங்கிய மான்யத்தைத் தவறான முறைகளில் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
“அவ்விவகாரம் பற்றி தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது”, என்று சிலாங்கூர் சட்டமன்றத் தலைவர் தெங் சாங் கிம் இன்று சட்டமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
திறமை,பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை மீதான சிலாங்கூர் சட்டமன்றத் தேர்வுக்குழு(செல்கேட்) அந்த விசாரணையை மேற்கொள்ளும்.
அக்குழு, பணத்தை ஆடம்பரமாக செலவிட்டதாகக் கூறப்படும் யாயாசான் சிலாங்கூர்மீதும் விசாரணை நடத்தவுள்ளது.அத்துடன் கோலா செமஸ்டா நிறுவனம்(கேஎஸ்எஸ்பி) சம்பந்தப்பட்ட மணல் விவகாரத்தையும் அது திரும்பவும் கிளறப் போகிறது.
மேலே குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் முறைகேடுகள் தொடர்பில் கூடுதல் தகவல் வைத்திருப்போர் தம் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம் என்றும்,அவர்கள் சாட்சிகளாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெங் கூறினார்.
கேஎஸ்எஸ்பி-யிலும் யாயாசான் சிலாங்கூரிலும் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது பற்றி உள்தணிக்கையின்போது தெரிய வந்தது.
மார்ச் 5 தொடங்கி மார்ச் 7-வரை நடைபெறும் பொதுவிசாரணைக்கு “சம்பந்தப்பட்ட அனைவரும் அழைக்கப்படுவர்” என தெங் கூறினார்.
செல்கேட்டின் பணி முறைகேடுகளைக் கண்டறியவது, முறைகேடுகள் நிகழ்துள்ள இடங்களில் திருத்தங்களை மாநில அரசுக்குப் பரிந்துரைப்பது என்ற அளவில்தான் இருக்கும் என்பதையும் தெங் குறிப்பிட்டார்.
அவைமீது குற்றவியல் மேல்நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அதற்கில்லை.
“போலீஸ் அல்லது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்தான் அதைச் செய்ய வேண்டும்”, என்றாரவர்.