பொது விவாதங்களை ஆதரிப்பதாக பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் விடுத்துள்ள அறிக்கை, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் ஒரு பொது விவாதத்தில் கலந்துகொள்ள வழிவகுக்க வேண்டும் என்று பிகேஆர் விருப்பம் தெரிவித்துள்ளது.
அப்படியொரு விவாதத்துக்கு தெங்கு அட்னானே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“அது வெறும் பேச்சாக இருக்காது என்று நம்புகிறேன். பிஎன், அதன் தலைவர்கள் விவாதங்களில் கலந்துகொள்ளத் தடையில்லை என்று கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன்.
“அன்வாரின் தரப்பிலிருந்து வாருங்கள் விவாதத்துக்கு என்று மறுபடியும் அழைக்கிறோம். தெங்கு அட்னான் இரு பெரும் தலைவர்களுக்கிடையில் விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்”, என்று சைபுடின் குறிப்பிட்டார்.
அம்னோ தலைமைச் செயலாளருமான தெங்கு அட்னான், கடந்த சனிக்கிழமை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-க்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-குக்குமிடையில் நடந்ததைப் போன்ற விவாதங்களில் கலந்துகொள்ள ஆளும் கட்சித் தலைவர்கள் எப்போதும் தயாராகவே உள்ளனர் என்று கூறியதாக த ஸ்டார் இன்று அறிவித்திருந்தது.
இப்படிப்பட்ட விவாதங்கள் “ஆரோக்கியமானவை” என்றும் அந்த அம்னோ தலைவர் குறிப்பிட்டதாக தெரிகிறது.