ஒரு காலத்தில் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு சொந்தமாக இருந்த நிறுவனம் ஒன்றின் கப்பல்கள் போர்ட் கிளாங் துறைமுகத்தின் வெஸ்ட் போர்ட் பகுதிக்கு சுதந்திரமாக வந்து சென்றுள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய ஜிங்கா 13 என்னும் அரசு சாரா அமைப்பு கூறுகிறது.
Zim Atlantic என்னும் அந்தக் கப்பல் பிப்ரவரி 16ம் தேதி போர்ட் கிளாங் துறைமுகத்தில் அணைந்தது என்றும் அது இஸ்ரேலில் உள்ள ஆஷ்டோட் துறைமுகத்திலிருந்து நேரடியாக வந்தது என்றும் சுங்கத் துறை, வெஸ்ட் போர்ட்ஸ் மலேசியா ( Westports Malaysia ), Zim Integrated Shipping Services Ltd என்ற நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து கிடைத்த ஆவணங்களை மேற்கோள் காட்டி ஜிங்கா 13 தெரிவித்தது.
“அந்த வாணிகம் இஸ்ரேலியப் பொருளாதாரத்துக்கு உதவுகிறது. பாலஸ்தீன மக்களைக் கொல்லும் ஆயுதங்களுக்கு கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பணத்தை மலேசியா வழங்கியுள்ளதாகவும் நாங்கள் நம்புகிறோம்,” என ஜிங்கா 13 தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரிஸ் மூசா கூறினார்.
Zim Atlantic என்ற அந்தக் கப்பல் ஜெர்மானிய நிறுவனம் ஒன்றுக்காக வெட்டுமரத்தைக் கொண்டு சென்றது என்பதை பிப்ரவரி 15ம் தேதியிடப்பட்ட சுங்கத் துறை ஆவணம் காட்டுகிறது.
அதே நாளன்று Zim USA என்னும் கப்பலும் வெஸ்ட் போர்ட் துறைமுகத்துக்கு வந்தது என ஜிங்கா 13 கூறிக் கொண்டது.
அந்த இரண்டு கப்பல்களும் லைபிரியாவில் பதிவு செய்யப்பட்டவை. லைபிரியக் கொடிகளை பறக்க விட்டிருந்தன. ஆனால் Zim USA ஏற்கனவே இஸ்ரேலில் பதிவு செய்யப்பட்டு 2010ம் ஆண்டு மறு பதிவு செய்யப்பட்டுள்ளது சோதனைகள் மூலம் தெரிய வந்ததாக பேரிஸ் சொன்னார்.
“Zim Integrated Shipping Services Ltd நிறுவனத்தின் தலைமையகம் இஸ்ரேலில் உள்ள ஹைபாவில் அமைந்துள்ளது,” என்றார் அவர்.
அந்த Zim நிறுவனத்தின் இன்னொரு கப்பல் வரவிருக்கும் புதன் கிழமையன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஜிங்கா 13 திட்டமிட்டுள்ளது. அதில் கலந்து கொள்ளுமாறு பாலஸ்தீன ஆதரவு அரசு சாரா அமைப்புக்கள் அனைத்துக்கும் அது அழைப்பு விடுத்தது.
அந்த Zim கப்பல் நிறுவனத்தின் இணையத் தளத்தின் படி, அடுத்த இரண்டு மாதங்களில் அதன் மேலும் 10 கப்பல்கள் போர்ட் கிளாங் துறைமுகத்துக்கு வந்து செல்லவிருக்கின்றன.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான இஸ்ரேல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமாக இருந்த Zim கப்பல் நிறுவனம் 1999ம் ஆண்டு தனியார் மயமாக்கப்பட்டது. அதில் Ofer Brothers குழுமம் கட்டுப்பாட்டு பங்குகளை வைத்துள்ளது.
‘அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்’
அது தனியார் வர்த்தகம் எனக் கூறி அரசாங்கம் அந்த விவகாரத்திலிருந்து தனது கையைக் கழுவிக் கொள்ளக் கூடாது என நிருபர்கள் சந்திப்பில் உடனிருந்த பிகேஆர் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் அஸ்மிஸாம் ஸாமான்ஹுரி கூறினார்.
“இந்த நாட்டில் நங்கூரமிடும் எந்தக் கப்பலும் அரசாங்க அனுமதியைப் பெற வேண்டும். அந்தக் கப்பலில் ஏற்றி இறக்கப்படும் பொருட்களுக்கு அரசாங்கம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அரசாங்கம் வரிகளையும் சுங்க வரிகளையும் வசூலிக்கிறது,” என்றார் அவர்.
தனியார் நிறுவனங்கள் இஸ்ரேலுடன் வர்த்தகம் செய்வதை அரசாங்கம் தடுக்க முடியாது ஆனால் அதனை ஊக்குவிக்கவில்லை என இந்த மாதத் தொடக்கத்தில் அனைத்துலக வாணிக தொழிலியல் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதீர் கூறியிருந்தார்.