நஜிப்-உடன் விவாதம் நடத்த ஹாடியும் தயார்

மக்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னை மீதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் விவாதம் நடத்த பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விரும்புவதாக அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறியிருக்கிறார்.

நஜிப் அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் சொற்போர் நடத்த வேண்டும் என விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோட்களை பாஸ் ஆதரிப்பதாக அவர் சொன்னார்.

அதே வேளையில் பிரதமர் பாஸ் தலைவருடனும் விவாதம் நடத்த வேண்டும் என மாஹ்புஸ் குறிப்பிட்டார். காரணம் இந்த நாட்டில் அம்னோவும் பாஸ் கட்சியும் மிகப் பெரிய மலாய் அடிப்படைக் கட்சிகளாகும்.

“நஜிப் ஹாடியுடன் எந்தப் பிரச்னை மீதும் விவாதம் நடத்தலாம். பாஸ் நிபந்தனைகளை விதிக்க விரும்பவில்லை. என்றாலும் மலாய்க்காரர்கள், இஸ்லாம் பற்றியதாக மட்டும் அது இருக்கக் கூடாது. ஏனெனில் நாம் பல இன நாட்டில் வாழ்கிறோம்,” என்றார் மாஹ்புஸ்.

“கடந்த கால சொற்போர் காட்டியுள்ளது போல நாட்டு மக்கள் எந்தப் பிரச்னையுமின்றி அதனைப் பார்த்து ஆய்வு செய்யும் அளவுக்கு முதிர்ச்சி அடைந்துள்ளனர்.”

கடந்த காலத்தில் தாம் பாஸ் இளைஞர் தலைவராக இருந்த போது விவாதத்துக்கு வருமாறு நான் அப்போதைய அம்னோ இளைஞர் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேனுக்குச் சவால் விடுத்தேன் என்றும் மாஹ்புஸ் தெரிவித்தார்.

‘மலாய்க்காரர்களுக்கு யார் துரோகி ?’ என்னும் தலைப்பிலான அந்த விவாதத்திற்கு அனுசரணையாளராக பணியாற்ற அரசப் பேராசிரியர் உங்கு அஜிஸ் தயாராக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த விவாதம் ரத்துச் செய்யப்பட்டது என அவர் சொன்னார்.

“எந்த ஒரு தலைப்பு மீதும் என்னுடன் விவாதம் நடத்த வருமாறு நான் ஹிஷாமுடினுக்கு மீண்டும் சவால் விடுக்க நான் தயாராக இருக்கிறேன்,” என்றார் அவர்.

அம்னோவுடன் விவாதம் நடத்த 1980ம் ஆண்டுகளிலிருந்து நீண்ட காலமாக அந்த இஸ்லாமியக் கட்சி காத்திருப்பதாகவும் மாஹ்புஸ் சொன்னார்.