பெர்காசாவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய அம்னோ மூத்த தலைவர்கள்

பல மூத்த அம்னோ தலைவர்கள், முன்னாள் பிரதமர் மகாதிர் உட்பட, இனவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக “கிட்டத்தட்ட இரகசியமாக” மலாய் உரிமைகள் போராட்ட அமைப்பான பெர்காசாவை இன்று சந்தித்தனர்.

“நாங்கள் மலாய்க்காரர்கள் பற்றி பேச முடியாது. நாங்கள் மலாய்க்காரர்களை பற்றி பேசினால், மக்கள் எங்களை இனவாதிகள் என்று கூறுகிறார்கள். ஆகவே, நாங்கள் தனிமையில் கிட்டத்தட்ட இரகசியாமாக சந்திக்க வேண்டியுள்ளது.

“வருத்தத்திற்குரியது, நாம் பேச்சு சுதந்திரம் மற்றும் மிதவாதம் பற்றி பேசுகிறோம், ஆனால் நாம் நம்மைப் பற்றி பேச முடியாது”, என்று மகாதிர் இன்று புத்ராஜெயாவில் நடந்த தனிப்பட்ட கூட்டத்திற்குப் பின்னர் கூறினார்.

கெடா முன்னாள் மந்திரி புசார் சனுசி ஜூனிட், முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின் மற்றும் முன்னாள் துணை அமைச்சர் காலிட் யுனுஸ் ஆகிய மூத்த அம்னோ தலைவர்கள் அங்கிருந்தனர்.

இன்றையக் கூட்டம் மலாய் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதாக இருந்தது என்று மகாதிர் கூறினார்.

மலாய் சமுதாயம் அம்னோ, பாஸ் மற்றும் பிகேஆர் என்று பிளவுபட்டிருப்பதால் பலவீனம் அடைந்துள்ளது விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றாகும்.

இந்த உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, சீனர்கள் பிரச்னைகள் குறித்து டிஎபியும் மசீசவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவாதம் நடத்தியது குறித்து ஏன் கேள்வி எழுப்பப்படவில்லை என்றார்.

“மசீசவும் டிஎபியும் சீன விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் போது அவர்களை எவரும் இனவாதிகள் என்று கூறவில்லை. ஆனால், மலாய்க்காரர்களின் பொருளாதார நிலவரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றியபோது, நாங்கள் இனவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டோம்”, என்றாரவர்.

“ஒட்டுமொத்த பெர்காசா தேசிய தலைமைத்துவம், வீரா மற்றும் வீரானித்தா தலைவர்கள், அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் 99 மாவட்ட தலைவர்கள் அங்கிருந்தவர்களில் அடங்குவர்”, என்று இப்ராகிம் அலி கூறினார்.