செம்புரோங் தாக்குதலினால் அன்வார் கலங்கவில்லை

ஜோகூர் செம்புரோங்கில் செராமா நிகழ்வு ஒன்றில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. என்றாலும் அத்தகைய வன்முறைகளுக்கு தாம் அடிபணியப் போவதில்லை என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் சூளுரைத்துள்ளார்.

எண்டாவ் நகரிலிருந்து செம்புரோங் நகரை அவர் இரவு மணி 11.30 வாக்கில் சென்றடைந்த போது அவருடைய கார் மீது கற்கள் வீசப்பட்டன.

“நான் செம்புரோங் சென்றடைந்த உடனடியாக என் கார் தாக்கப்பட்டது. குண்டர் கும்பல் ஒன்று என் காரைச் சேதப்படுத்தியது. கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன,” என அன்வார் நேற்றிரவு சிலாங்கூர் கோம்பாக் செத்தியாவில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட செராமா நிகழ்வில் கூறினார்.

“அங்கு போலீசார் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் பேசத் தொடங்கியதும் அந்த இளைஞர்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர்,” என்றார் அவர்.

தொந்தரவு கொடுப்பதற்காக அந்த இளைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறிக் கொண்ட  அன்வார் அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் அம்னோவையும் சாடினார்.

“அவர்களுக்கு 20 ரிங்கிட் கொடுக்கப்பட்டது.  அவர்கள் இடையூறு செய்தனர். நமது இளைஞர்களுடைய சிந்தனைகளை அம்னோ எந்த அளவுக்கு சேதப்படுத்தியுள்ளது என்பதை அது காட்டுகிறது. உங்களிடம் அம்னோ எண்ணங்கள் இருந்தால் அதனைக் கைவிட்டு விடுங்கள். தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது.”

“முட்டாளாக இருக்க வேண்டாம். மற்றவர்களை முட்டாளாக்கவும் வேண்டாம். பெருமையுள்ளவராகத் திகழுங்கள்,” என கூறிய அவர், “Lambang kita yang gagah” (நமது வல்லமை சின்னம்) என்னும் அம்னோ பாடலிலிருந்து ஒரு வரியையும் பாடினார். அப்போது கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.

அம்னோ தம்மை அச்சுறுத்துவதற்கு குண்டர்களைக் கூலிக்கு அமர்த்தலாம். ஊடகங்கள் வழியாகவும் கூட என்னைக் குறை கூறலாம். என்னுடைய பதில் இது தான்: “நான் ஒய மாட்டேன்.”