அன்வார்: “நான் ஹாமாஸ், பாத்தா கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்”

இஸ்ரேல் மீது அண்மையில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அனைத்துலக ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் பெர்ம் சர்ச்சையை உருவாக்கி விட்டன.

அதன் தொடர்பில் தன்னிலையை விளக்குவதற்காக அன்வார், இன்று பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்ஹுல் அஜிஸ் நிக் மாட்-டை இன்று சந்தித்தார்.

40 நிமிடங்களுக்கு மேல் அந்தச் சந்திப்பு நீடித்தது. அதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார்,” இஸ்ரேல் மீதான தமது நிலை பாலஸ்தீன அரசியல் தரப்புக்களான ஹாமாஸ், பாத்தா ஆகியவற்றின் நிலைகளுக்கு ஏற்ப இருப்பதாக கூறினார்.

“நான் விளக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஹாமாஸ், பாத்தா விருப்பங்களையும் இரண்டு வாரங்களுக்கு முன்பு டோஹாவில் அவற்றுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுக்களையும் நான்  பின்பற்றுகிறேன்,” என்றார் அவர்.

கோலாலம்பூரில் நிகழ்ந்த அந்தக் கூட்டத்தில், தமது அறிக்கை ‘அவசர நடவடிக்கைகள்'( contingents ) என்பதுடன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என நிக் அஜீஸிடமும் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் -னிடமும் கூறியதாகவும் அன்வார் சொன்னார்.

அந்த ‘அவசர நடவடிக்கைகள்’ குறித்து தாம் ஹாமாஸ் தலைவர்களிடமும் விளக்கியுள்ளதாகவும் அவர் கூறிக் கொண்டார். அவை வருமாறு:

1. பாலஸ்தீனப் பிரதேசத்திலிருந்து எல்லா இஸ்ரேலியத் துருப்புக்களும் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும்.
2. அனைத்து இஸ்ரேலிய வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
3. காஸா முற்றுகை நீக்கப்பட வேண்டும்.
4. ஜெருசலம் பாலஸ்தீன தலைநகரமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்

“ஹாமாஸ் தலைவர் காலித் மாஷால் என்னிடம் கூறினார்,” சகோதரர் அன்வார், எனக்கு அந்த அவசர நடவடிக்கைகள் என்ன என்பது தெரியும்.அது தெளிவானது.”

அன்வார் சந்திப்பு நடைபெற்ற பிஎன்பி டேர்பி பார்க் வளாகத்தில் நிருபர்களைச் சந்தித்தார்.

‘பாஸ் நிலையுடன் வேறுபாடுகள்’

என்றாலும் பாஸ், இஸ்ரேலுக்கு எதிராக “கடுமையான ” நிலையைப் பின்பற்றுவதை அன்வார் ஒப்புக் கொண்டார்.

“அந்த வேறுபாடு வலியுறுத்துவது சம்பந்தப்பட்டதாகும். இஸ்ரேலுக்கு எந்த விதமான அங்கீகாரமும்..ஏன் அதனுடன் பேச்சுக்கள் கூட நடத்தப்படக் கூடாது என பாஸ் எண்ணுகிறது.”

என்றாலும் பேச்சுக்கள் நடத்துவது ஹாமாஸையும் பாத்தாவையும் பொறுத்தது என்பதை அன்வார் சுட்டிக் காட்டினார்.

தமது அரசியல் எதிரியான அம்னோ, இஸ்ரேலுடன் எந்த உறவுகளை வைத்துக் கொள்ளவில்லை எனக் “கூறிக் கொண்டு” அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்வதாக அன்வார் சாடினார்

“மலேசியப் பிரதமர் இஸ்ரேலியப் பிரதமரைச் சந்தித்துள்ளார். வெளியுறவு அமைச்சரும் தற்காப்பு அமைச்சரும் இஸ்ரேலிய வெளியுறவு தற்காப்பு அமைச்சர்களைச் சந்தித்துள்ளனர்,” எனக் கூறிய அவர்தாம் ஒரு போதும் இஸ்ரேலியச் சகாவைச் சந்திதது இல்லை என்றார்.