இன அவநம்பிக்கைக்கு இடையில் 54வது மெர்தேகா

மலேசியர்கள் இன்று 54வது மெர்தேகாவைக் கொண்டாடுகின்றனர். இனங்களுக்கு இடையிலும் சமயங்களுக்கு இடையிலும் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் வழக்கமான கோலாகலத்துடன் மலேசியர்கள் தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

மலேசியா தனது பல பண்பாட்டு சமுதாயம் குறித்தும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பின்னணியில் சமயச் சுதந்திரம் பின்பற்றப்படுவது குறித்தும் பெருமை கொள்கிறது. என்றாலும் அடிமட்டத்தில் இன பதற்றம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

மலேசியாவில் இன உறவுகள் நன்றாக இருப்பதாக கருதிய மலேசியர்கள் எண்ணிக்கை விகிதம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 78 விழுக்காடாக இருந்தது. அந்த விகிதம் இப்போது 66 விழுக்காடாக சரிந்து விட்டது என மெர்தேகா ஆய்வு மையம் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.

வெவ்வேறு இன வம்சாவளிகளைச் சேர்ந்த மலேசியர்களிடையே அவநம்பிக்கை அதிகரித்துள்ளதை அது குறித்தது.

“எங்கள் எண்ணப்படி- மலேசிய மக்களுடைய சிந்தனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் கண்டுள்ளது. ஈராயிரத்தவது ஆண்டுகளின் மத்தியில் காணப்பட்ட நம்பிக்கை உணர்வு இப்போது குறைந்து அவநம்பிக்கையும் பாதுகாப்பற்ற உணர்வும் அதிகரித்துள்ளது. அதற்கு போட்டி நிறைந்த நடப்பு அரசியல் சூழ்நிலையே காரணமாகும்”, என அந்த ஆய்வு மையம் இம்மாதத் தொடக்கத்தில் கூறியது.

“இனமும் சமயமும் எப்போதும் உணர்ச்சிகரமான பிரச்னைகளாக இருந்து வந்துள்ளன. என்றாலும் அண்மையக் காலமாக இனங்களுக்கு இடையில் பிளவு அதிகரித்துள்ளது.”

கடந்த ஆண்டு “அல்லாஹ்” என்னும் சொல்லை முஸ்லிம் அல்லாதாரும் பயன்படுத்த உயர் நீதிமன்றம் அனுமதித்ததற்கு எதிராக உள்துறை அமைச்சு முறையீடு செய்து கொண்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பு பல முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்தது.

அந்த வழக்கைத் தொடர்ந்து குறைந்தது எட்டுத் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒன்று கோலாலம்பூரில் உள்ளது. அதன் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன.

அந்தத் தாக்குதல்கள் உயிருடற்சேதம் ஏதுமில்லை என்றாலும் பல இன மலேசியாவில் நலிவாகவும் பதற்றமாகவும் இருக்கின்ற உறவுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன.

2009ம் ஆண்டு பதவி ஏற்ற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன பிளவை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாக வாக்குறுதி அளித்த போதிலும் மலேசியாவின் அரசியல், கல்வி, பொருளாதார கட்டமைப்புக்களில்  இன, சமய அடிப்படை ஆழமாக வேரூன்றியுள்ளன.

இனங்களுக்கு இடையில் பதற்ற நிலை கவலையளிக்கும் விகிதத்தில் இருப்பதற்கு இனவாதத்தை முன்வைக்கும் பொறுப்பற்ற அரசியல்வாதிகளே காரணம் என்று குறை கூறப்பட்டுள்ளது.

“‘ஒரே மலேசியா சேவை உதட்டளவுக்கு மட்டுமே”

கல்வி தொடக்கம் பொருளாதார, தேர்தல் சீர்திருத்தம் வரை எல்லா அம்சங்களிலும் அரசாங்கக் கொள்கைகள் தொடர்ந்து “பொதுவான விஷயங்களை தேடாமல் இன வடிவமைப்பில் உருவாக்கப்படுகின்றன” என்று மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் இன வம்சாவளி ஆய்வியல்துறையைச் சார்ந்த முன்னிலை ஆய்வாளரான டெனிசன் ஜெயசூரியா கூறியுள்ளார்.

“அத்தகைய உருவாக்கமும் இன வம்சாவளிக் கொள்கைகளை வலியுறுத்தும் கொள்கைகளும் நடப்பு மலேசிய சமூகம் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன”, என ஜெயசூரியா கருதுகிறார்.

நஜிப்பின் செல்வாக்கும் சரிந்துள்ளதை மெர்தேகா மையம் ஆகஸ்ட் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் அவரது செல்வாக்கு ஆகஸ்ட்டில் ஆறு விழுக்காடு விழுந்துள்ளது.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பதும் குற்றச் செயல் விகிதம் உயர்வாக இருப்பதும் அதற்கு முக்கியக் காரணங்கள் எனக் கூறப்பட்டாலும் இன, சமய பிரச்னைகளை அவர் எதிர்கொண்ட விதமும் அவருடைய செல்வாக்கைக் குறைத்துள்ளது என்பது வெள்ளிடைமலை.

இன வேறுபாடுகளைக் களைந்து ஒரே ஒற்றுமையான ஐக்கிய மலேசிய அடையாளத் தன்மையை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட அவரது “ஒரே மலேசியா” இயக்கம் 2008 பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்ற அவரது ஆளும் கூட்டணிக்கு வாக்குகளைக் கவருவதற்கு நடத்தப்படும் நாடகம் என வருணிக்கப்பட்டுள்ளது.

“நான் நஜிப்பின் ஒரே மலேசியாவை நம்பவில்லை. அது வெறும் உதட்டளவுச் சேவை”,  பத்திரிக்கையாளரான மரியா ஹசான் கூறினார்.

“களத்தில் இனப் பிளவு அதிகரித்து வருவதே உண்மை நிலை”, என்றார் அவர்.

பல ஆக்கப்பூர்வமான சீர்திருத்தக் கொள்கைகளை நஜிப் நடப்புக் கொண்டு வந்துள்ள போதிலும் தமது ஆளும் அம்னோ உறுப்பினர்களிடமிருந்து வருகின்ற இனவாத அறிக்கைகளை கண்டிக்காமல் “அமைதியாக இருக்கிறார்” என்று ஜெயசூரியா குறிப்ப்பிடுகிறார்.

இன, சமய ஒற்றுமை குறித்த எதிர்காலம் மங்கலாகத் தோன்றினாலும் உணர்வுகளைத் தூண்டும் விஷயங்களில் நியாயமாக நடந்து கொள்ளும் மிதவாத மலேசியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டெனிசன் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைத்துள்ளார்.

“கால ஒட்டத்தில் மலேசியர்கள் எல்லா வகையான தீவிரவாதத்தையும் நிராகரிப்பார்கள்,,” எனக் குறிப்பிட்ட அவர், மலேசிய உணர்வு… நம்மை சமநிலைக்குக் கொண்டு செல்லும்”, என்றார்.

டிபிஏ

TAGS: