விடுதலை தினத்தில் விடுதலை கோரும் வாகன ஊர்வலம்

“மெர்டேக்கா” என்ற முழக்கத்துடன் சுமார் நூற்றுக்கும் அதிகமான வாகனமோட்டிகள் தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட மோட்டார் வண்டிகளில் கிள்ளான் முதல் சா ஆலம் வரை ஊர்வலமாக வந்தனர்.

“விடுதலை தினத்தன்று எங்களுடைய கொண்டாட்டம் இது” என்கிறார் இதில் பங்குபெற்ற தமோதிரன். நேற்று காலை பண்டமாரன் மைதானத்தில் ஆரம்பித்த இந்த ஊர்வலம், நமது சமூகத்தின் நீண்ட ஊர்வலத்தில் ஒரு தொடர்ச்சியென வர்ணித்த இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் கா.ஆறுமுகம் “விடுதலை தினத்தில் விடுதலை கோரும் வாகன ஊர்வலமே இது. அந்நியரிடமிருந்து விடுதலை பெற்று 53 ஆண்டுகள் முடிந்த வேளையில், நாட்டு மக்கள் என்ற நமக்கான விடுதலையை நாட்டு பற்றுடன் தேட வந்துள்ளோம்” என்கிறார்.

“வானொலியும் தொலைக்காட்சியும் காட்டும் விடுதலையையில் எங்களுக்கும் பங்கு வேண்டும், நாங்களும் நாட்டு மக்கள்தானே” என வினவுகிறார் குடும்பத்துடன் பங்கெடுத்த மாணிக்கம்.

“அண்ணே, எனக்கு “நான் மலேசியன்” என்று சொல்ல ஆசை, ஆனால் யாரண்ணே, என்னை மலேசியனன்று பாக்கறா?” என தனது வேதனையை வெளிப்படுத்தினார் மலேசிய கொடியை தன் உடம்பில் போர்த்திப பங்குகொண்ட செல்வம் என்ற இளைஞர். “இதை இன்னக்கி முழுக்க போத்திகிட்டுதான் இருப்பேன். இது நம்ப கொடிண்ணே!” என்கிறார்.

“D2D (Dream to Destination) இலக்கை அடையும் கனவு என்ற சுலோகத்தை கொண்ட இந்த ஊர்வலம் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண கருவூலத்தில் காசில்லையா?” என்ற வினாவை முன்வைப்பதாக பங்குகொண்ட குணராஜ் ஜோர்ஜ் கேள்வி எழுப்பினார்.

குறைந்த சம்பளம், விலைவாசி ஏற்றம், இனவாத கொள்கைகள் வழி வாணிபம், கல்வி ஒதுக்கீடுகள் போன்ற அரசாங்க கொள்கைகள் இந்தியர்களை விடுதலை நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக உருவாக்கி விட்டதால் அதிலிருந்து விடுதலை கேற்கிறோம் என்கிறார்கள் இந்த நிகழ்வின் எற்பாட்டுக் குழுவைச் சார்ந்த  சேகரனும் குணாளனும்.

TAGS: